தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இணைப்புச்சாலை அமைக்கும் திட்டம்? அதிகாரிகள் முன்வருவார்களா!

 இணைப்புச்சாலை அமைக்கும் திட்டம்? அதிகாரிகள் முன்வருவார்களா!

 இணைப்புச்சாலை அமைக்கும் திட்டம்? அதிகாரிகள் முன்வருவார்களா!


ADDED : ஜன 31, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: பனப்பாளையத்தில், வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இணைப்புச்சாலை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் முன்வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பல்லடத்தில், தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை கொச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன.

இவை அனைத்தும், பல்லடம் நகர எல்லைக்கு உட்பட்டு இணைவதாலேயே, பல்லடத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், பல கிலோமீட்டர் தூரத்துக்கு, போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுகிறது.

பல்லடம் -- வெள்ளகோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோதும், பல்லடம் நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. முக்கிய புறவழிச்சாலை திட்டங்களும் கிடப்பில் உள்ள நிலையில், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டே, திருப்பூர் ரோடு சந்திப்பு அருகே, சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் வாயிலாக, வாகன நெரிசலை கட்டுப்படுத்தலாம் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் யோசனை தெரிவித்திருந்தனர். பல்லடம், பனப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் ரோடு சந்திப்பு உள்ளது.

திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும், பனப்பாளையம் சிக்னலில் நிற்கின்றன.

திருப்பூர் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் இடதுபுறம் திரும்பி செல்வதற்கு தேவையான ரோடு வசதி இங்கு இல்லை. எனவே, திருச்சி, மதுரை செல்லும் வாகனங்களுடன், திருப்பூர் செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நிற்பதாலேயே, இப்பகுதியில் தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த, இங்குள்ள நீரோடைக்கு மேல் தரைமட்ட பாலத்துடன், 200 மீட்டருக்கு இணைப்புச்சாலை அமைப்பதால், திருப்பூர் செல்லும் வாகனங்கள் காத்திருக்காமல் தடையின்றி செல்ல முடியும்.

சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் முன்வைத்த எளிய யோசனையை நிறைவேற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us