/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை துறையை கண்டித்து போராட திட்டம்
/
நெடுஞ்சாலை துறையை கண்டித்து போராட திட்டம்
ADDED : ஆக 21, 2025 11:39 PM

பல்லடம்; நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, போராட்டம் நடத்த சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.
பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் - சுல்தான்பேட்டை வரை, 2.5 கி.மீ., இடைவெளிக்குள் அமைக்கப்பட்டுள்ள, 21 வேகத்தடைகளால், அன்றாடம் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், இப்பகுதியில், முதியவர் ஒருவர் வேன் மோதி உயிரிழந்தார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள இப்பகுதி பொதுமக்கள், விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:சுல்தான்பேட்டையில், சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால், அன்றாடம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். வேகத்தடைகளை இங்கு எதற்காக அமைத்து சோதனை செய்ய வேண்டும்? பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அதிகாரிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தி உள்ளோம்.
இணைப்புச் சாலைகளில் வேகத்தடை அமைக்காமல், நெடுஞ்சாலையில் அமைத்து, இப்பகுதி மக்களை சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மற்றும் கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் ஆகியோரை சந்தித்து வேகத்தடைகளை அகற்றுமாறு மனு கொடுத்தும் பயனில்லை. பல கட்ட போராட்டத்திற்குப் பின், வேகத்தடைகளுக்கு இடையே, ஜல்லிகள் கொட்டி நிரப்புவதாக கூறிய நெடுஞ்சாலை துறையினர், ஒரே ஒரு வேகத்தடைக்கு மட்டும் ஜல்லி போட்டனர். அதன்பின், 'தார் இல்லை, ஜல்லி இல்லை, ஆட்கள் இல்லை' என, சாக்குபோக்கு சொல்லி வருகின்றனர்.
உயிரிழப்புக்கு காரணம் வேகத்தடை நேற்று முன்தினம், வதம்பச்சேரியை சேர்ந்த தங்கராஜ், 55 என்பவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, வேன் மோதி உயிரிழந்தார். வேகத்தடையே இதற்கு முழு காரணம். உயிரிழந்த தங்கவேல், சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது, அந்த சிறுவன் ஆதரவற்றவராகி விட்டார். இந்த கொடூர செயலுக்கு நெடுஞ்சாலை துறையினர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையை கண்டித்து, சுல்தான்பேட்டையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

