/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம்; மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்பார்ப்பு
/
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம்; மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்பார்ப்பு
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம்; மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்பார்ப்பு
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம்; மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 03, 2025 11:26 PM
உடுமலை; குடிமங்கலம் ஒன்றியத்தில், நீர் நிலைகளில், செழித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், 7,188 ெஹக்டேர், ஆழ்குழாய் கிணறுகள் வாயிலாக 3,012 கிணற்றுப்பாசனத்தில், 5,719, மீதமுள்ள, 5,534 ெஹக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றுப்பாசனத்துக்கு, நிலத்தடி நீர் மட்டமே முக்கிய ஆதாரமாக உள்ளது.
ஆறு, சிற்றாறுகள் எதுவும் இல்லாத இப்பகுதியில், பருவமழைக்காலங்களில், உப்பாறு ஓடையில், செல்லும் தண்ணீரை தேக்கி வைப்பதே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு உள்ள ஒரே வாய்ப்பாகும்.
மழை குறைவு
குடிமங்கலம் பகுதியின் சராசரி மழையளவு, 681 மி.மீ., மட்டுமே ஆகும். இதில், வடகிழக்கு பருவமழையால், 70 சதவீதம், 18 சதவீதம் கோடை மழை, 12 சதவீதம், தென்மேற்கு பருவமழையாகவும் கிடைக்கிறது.
பருவமழை குறையும் காலங்களில், அப்பகுதியில், கடும் வறட்சி ஏற்பட்டு, பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்கள் கருகுகின்றன. எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய நிலை குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த உப்பாறு ஓடை, ஒன்றியத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த ஓடை தாராபுரம் தாலுகாவிலுள்ள, உப்பாறு அணைக்கு செல்கிறது.
மழைக்காலங்களில் மட்டும் நீர்வரத்து உள்ள இந்த ஓடைகள் முறையான பராமரிப்பு இல்லாமல், பரிதாப நிலையில் உள்ளது. ஓடையின் கரைகள் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
இந்த மரங்கள், அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதுடன், அதிக வெப்பத்தையும் வெளிவிடுவதால், மழைக்காலங்களில் ஓடையில் செல்லும் தண்ணீர் விரைவாக காணாமல் போய்விடுகிறது.
பல்வேறு இடங்களில், கட்டப்பட்ட தடுப்பணைகளிலும், தண்ணீர் தேங்குவதில்லை. எனவே, குடிமங்கலம் பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற, பல்வேறு உத்தரவுகளை அரசு வெளியிட்டாலும், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக, ஓடையில் வளர்ந்துள்ள, இம்மரங்களை அகற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வரும் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் முன் பணிகளை தீவிரப்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.