வெண்பட்டுக்கூடு உற்பத்தியை அதிகரிக்க... திட்டம்!மானியத்தில் வழங்க நாற்று உற்பத்தி தீவிரம்
வெண்பட்டுக்கூடு உற்பத்தியை அதிகரிக்க... திட்டம்!மானியத்தில் வழங்க நாற்று உற்பத்தி தீவிரம்
UPDATED : ஜூலை 05, 2026 03:23 PM
ADDED : ஜூலை 05, 2026 03:20 PM

உடுமலை: வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில், மானியத்தில் மல்பெரி நாற்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக., மாதத்தில் நடவு செய்யும் வகையில், மைவாடி பட்டுப்பண்ணை நாற்றங்காலில், 50 ஆயிரம் மல்பெரி நாற்றுகள் தயாராகி வருகிறது. நமது நாட்டுக்கு தேவையான கச்சா பட்டு இறக்குமதியை குறைக்க, உள்நாட்டில் வெண்பட்டுக்கூடு உற்பத்தியை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.
மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள் வாயிலாக, புதிய தொழில்நுட்பங்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் பட்டு வளர்ச்சித்துறை வாயிலாக, புழு வளர்ப்பு மனை உள்ளிட்ட தேவைகளுக்காக மானிய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
அதிக நுாலிழை நீளம் கொண்ட தரமான வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு, சீதோஷ்ண நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
அவ்வகையில், உடுமலை பகுதியில், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் வாயிலாக, சில ஆண்டுகளுக்கு முன் வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
சீதோஷ்ண நிலையும், ஒத்துப்போனதால், தமிழகத்தில், இவ்வகை பட்டுக்கூடு உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. சுற்றுப்பகுதிகளில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், மல்பெரி சாகுபடி செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் தேவைக்காக அரசு கொள்முதல் மையமும், மைவாடியில் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு மல்பெரி சாகுபடி பரப்பை அதிகரித்து, அதன் வாயிலாக வெண்பட்டுக்கூடு உற்பத்தியையும் கூடுதலாக்க, பட்டு வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, உடுமலை சுற்றுப்பகுதியில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மல்பெரி நாற்றுகள் உற்பத்தி பட்டு வளர்ச்சித்துறையின் மைவாடி பண்ணையில் தயாராகி வருகிறது.
தரமான இலைகள் மற்றும் சீதோஷ்ண நிலைக்கு உகந்த, வி1 மற்றும் எம்.ஆர்.,. 2 ரக நாற்றுகள் நாற்றாங்காலில் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக, 50 ஆயிரம் நாற்றுகள் வரும், ஆக., மாதத்தில், விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
ஒரு நாற்று, ரூ.1.50க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மண்டல பாசனம் மற்றும் வடகிழக்கு பருவமழை சீசனில், விளைநிலங்களில் விவசாயிகள் நாற்று நடவு செய்யும் வகையில், பட்டு வளர்ச்சித்துறையினர் பணிகளை திட்டமிட்டுள்ளனர். அடுத்த சீசனில், 25 ஆயிரம் நாற்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: தரமான வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு, மல்பெரி இலைகளே ஆதாரமாக உள்ளன. பட்டுவளர்ச்சித்துறை சார்பில் மானியத்தில் நாற்றுகள் வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.
அதே வேளையில், புழு வளர்ப்பு மனை மற்றும் மல்பெரி தோட்ட பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்கான கருவிகளை மானியத்தில் கூடுதலாக வழங்க வேண்டும்.
வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் முன்னிலை என்ற நிலையை உடுமலை பகுதி தக்க வைக்க, வேளாண் கருவிகள் மானியத்தை கூடுதலாக வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான முட்டைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
