/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏழு குளங்களின் நீர் மாசுபடுவதை தடுக்க திட்டங்கள் தேவை!: கழிவு நீர் நேரடியாக கலப்பதால் கவலை
/
ஏழு குளங்களின் நீர் மாசுபடுவதை தடுக்க திட்டங்கள் தேவை!: கழிவு நீர் நேரடியாக கலப்பதால் கவலை
ஏழு குளங்களின் நீர் மாசுபடுவதை தடுக்க திட்டங்கள் தேவை!: கழிவு நீர் நேரடியாக கலப்பதால் கவலை
ஏழு குளங்களின் நீர் மாசுபடுவதை தடுக்க திட்டங்கள் தேவை!: கழிவு நீர் நேரடியாக கலப்பதால் கவலை
ADDED : பிப் 20, 2026 04:42 AM
உடுமலை: பாசன மற்றும் சுற்றுச்சூழல் ஆதாரமாக இருக்கும் குளங்களில், கழிவு நீர் நேரடியாக கலப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குளத்து நீர் மாசுபடுவதை தடுக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அதிருப்தி நிலவுகிறது. உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்தின் கீழ், தினைக்குளம், செங்குளம், செட்டிகுளம், பெரியகுளம், அம்மாபட்டி குளம், ஒட்டுக்குளம், வலையபாளையம் குளம் உள்ளிட்ட குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுப்பகுதி கிராமங்களின் பாசன ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன. அரசாணை அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து இக்குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேலும் இக்குளங்களுக்கு ஆண்டுதோறும், பல்வேறு அரிய வகை பறவையினங்கள் வலசை வருவது வழக்கம். இவ்வாறு, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவும் இக்குளங்கள் உள்ளன.
ஆனால், சில குளங்களில், அருகிலுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பது தொடர்கதையாக உள்ளது.உதாரணமாக, தளி பேரூராட்சி கழிவு நீர் தினைக்குளத்திலும், பள்ளபாளையம் ஊராட்சி கழிவு நீர் செங்குளத்திலும் நேரடியாக கலக்கிறது.
ஒட்டுகுளத்தின் நீர் வரத்து கால்வாயிலும் போடிபட்டி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகிறது. கழிவு நீர் தொடர்ந்து நேரடியாக குளத்தில் கலப்பதால், அங்கு பல மாதங்களுக்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசடைய துவங்கியுள்ளது.
சில பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், ஆகாயத்தாமரை உள்ளிட்ட களைச்செடிகளின் பெருக்கமும், குளங்களின் நீர் தேக்க பரப்பில் அதிகரித்துள்ளது.
அடுக்குத்தொடராக ஒவ்வொரு குளத்தில் இருந்து மற்ற குளங்களுக்கும் தண்ணீர் செல்வதால், ஒரு குளத்தில் ஏற்படும் பாதிப்பு பிற குளங்களின் தண்ணீரையும் மாசடைய செய்கிறது.
குளங்களின் அருகில் அமைந்துள்ள கிராமங்களில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப கழிவுகள் மற்றும் கழிவு நீர் வெளியேற்றமும் கூடுதலாகியுள்ளது. ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இல்லை.
இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு, அந்த உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதி ஆதாரமும் இல்லை. எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகியுள்ளது.
கழிவுநீர் கலப்பது மட்டுமல்லாமல், குளத்து கரை, நீர் வரத்து கால்வாய், பாசன ஷட்டர் மற்றும் கால்வாய் கரைகளில், கட்டுமான கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை குவித்து வைத்துள்ளனர்.
சமீபகாலமாக அனைத்து குளங்களிலும் இப்பிரச்னை அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், குளத்து கரையில் கழிவுகள் கொட்டப்படுவதை ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்வதில்லை.
பராமரிப்பில் அலட்சியம் அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஏழு குள பாசன திட்ட குளங்கள் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தும், பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுகிறது.
கழிவு நீர் கலப்பதை தடுக்க, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், குளத்து கரைகள் அனைத்தும், திறந்தவெளி பாராக மாற்றப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து வீசப்படுகின்றன.
இதை கட்டுப்படுத்த மட்டுமாவது பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

