/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை அன்னை ஆசி வழங்க 23,500 மரக்கன்றுகள் நடவு
/
இயற்கை அன்னை ஆசி வழங்க 23,500 மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 08, 2025 12:40 AM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில், சங்கரண்டாம்பாளையத்தில், சவுக்கு மற்றும் மகாகனி என, ஒரே இடத்தில், 23 ஆயிரத்து, 500 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், மரக்கன்றுகள் தேர்வு செய்து வளர்க்கப்படுகிறது. பயனுள்ள வகை மரங்களை வளர்க்கும் போது, இயற்கை பாதுகாப்பு மேம்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தாண்டில், 11வது திட்டம் துவங்கி, உடுமலை, வெள்ளகோவில், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், விவசாய நிலங்களில் அதிக அளவு மரக்கன்று நட்டு வளர்க்க முன்பதிவு செய்துள்ளனர். விவசாயிகளும் ஆர்வமாக மரம் வளர்க்க முன்வருகின்றனர்.
வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தில், தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம் வேணாவுடையாருக்கு சொந்தமான நிலத்தில், சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது.
கலர் தோட்டத்தில் நேற்று, நில உரிமையாளர் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், இயற்கை அன்னைக்கு மரியாதை செய்தனர். மரக்கன்று நடும் இடத்தில், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சங்கனிகள் வைத்து, ஊதுவத்தி மற்றும் சூடம் ஏற்றி வைத்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, 2,500 மகாகனி, 21 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணி துவங்கியது.
சங்கரண்டாம்பாளையத்தில், ஒரே இடத்தில், 21 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் நட்டுவைப்பதன் மூலமாக, அப்பகுதி சவுக்கு காடு போல் மாறும் என, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.