/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதமான கால நிலை; படகு சவாரி ஜோர்
/
இதமான கால நிலை; படகு சவாரி ஜோர்
ADDED : மே 26, 2025 06:33 AM

திருப்பூர்: வார விடுமுறை நாளான நேற்று லேசான மழை துாறலுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவியதால், திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி களை கட்டியது.
திருப்பூர், மங்கலம் ரோட்டில் உள்ள ஆண்டிபாளையம் குளக்கரையில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் கடந்தாண்டு இங்கு படகுத் துறை அமைக்கப்பட்டு, படகுகள் பொதுமக்கள் சவாரி செய்து மகிழும் வகையில் விடப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான நேற்று பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறையாகவும் இருந்தது. இதனால், படகுத் துறையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. அருகாமையில் உள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை காரணமாக 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. அங்கு பெய்த மழை காரணமாக திருப்பூர் பகுதியில்நேற்று காலை முதல் இரவு வரை லேசான துாறல் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.
ஆண்டிபாளையம் குளத்தில், படகு சவாரி செய்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களில் உள்ள படகு இல்லங்களில், படகு சவாரி ெசய்வது போன்ற உணர்வையும், திருப்தியையும் நேற்றைய தினம் இங்கு படகு சவாரி செய்தோர் அனுபவித்தனர்.
காலை முதல் மாலை வரை படகுகள் ஓய்வின்றி குளத்தில் பயணித்த வண்ணம் இருந்தது.