/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 செய்முறைத்தேர்வு நாளை துவக்கம்
/
பிளஸ் 2 செய்முறைத்தேர்வு நாளை துவக்கம்
ADDED : பிப் 05, 2025 11:09 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நாளை பிளஸ் 2 செய்முறைத்தேர்வு துவங்க உள்ளது. இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கல்வித்துறை முடுக்கியுள்ளது.
வரும் மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. முன்னதாக, மாணவ, மாணவியருக்கான செய்முறைத்தேர்வு நாளை (7ம் தேதி) மேல்நிலைப் பள்ளிகளில் துவங்குகிறது. வெற்று மதிப்பெண் பட்டியலை https://www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஒரு நாளைக்கு நான்கு பிரிவுகளாக தேர்வுகளை நடத்தலாம்.
அரசு தேர்வுகள் துறை வழங்கிய வழிகாட்டுதல்களை சரிவர பின்பற்ற வேண்டும். தேர்வர்களின் வருகை சான்றிதழ் அந்தந்த மையங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், ''தேர்வுகளை எவ்வித முறைகேடும் இல்லாமல் நடத்த வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஒருங்கிணைப்பு குழுவினர் தேர்வு நடக்கும் நேரத்தில், தேர்வு மையத்துக்குள் வெளிநபர்கள் யாரும் நுழையாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவையிருப்பின், போலீஸ் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம்.
பிற பகுதி பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் வந்து செய்முறைத்தேர்வு எழுதிச் சென்றால், அவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை முன்கூட்டியே வழங்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.