UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 11:46 PM

திருப்பூர்: மொபைல்போன் விற்ற பிரச்னையில், திருப்பூரில் பட்டப்பகலில் கல்லுாரி மாணவர் ஸ்ரீஹரி, 19, என்பவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற பிளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், ஏ.பி.டி., ரோடு, இந்திரா நகரை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் ஸ்ரீஹரி. தனியார் கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர்.
நேற்று மதியம், ஸ்ரீஹரி தன் வீட்டருகே நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கே.வி.ஆர்., நகர் போலீசார் நடத்திய விசாரணையில், தென்னம்பாளையத்தை சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவன் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. நேற்று மாலை மாணவனை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ‘ஸ்ரீஹரி, சமீபத்தில் தென்னம்பாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கு ஒரு மொபைல்போனை விற்றுள்ளார்.
அது சரியாக செயல்படவில்லை எனக்கூறிய மாணவன், அதை திருப்பிக் கொடுத்துவிட்டு, தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். இதற்கு ஸ்ரீஹரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், பிளஸ் 2 மாணவன், ஸ்ரீஹரியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது’ என்றனர்.
