/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முந்தைய அதிகாரி அதிரடியை தொடரும் போலீஸ் கமிஷனர்
/
முந்தைய அதிகாரி அதிரடியை தொடரும் போலீஸ் கமிஷனர்
ADDED : பிப் 09, 2025 12:53 AM
திருப்பூர்: முந்தைய போலீஸ் கமிஷனர் லட்சுமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்ட பாணியையே தற்போதைய போலீஸ் கமிஷனரும் தொடர்கிறார்.
திருப்பூர் போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. இதற்கு முன் கமிஷனராக இருந்த லட்சுமி மேற்கொண்டுள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, தற்போது உள்ள கமிஷனரும் தொடருகிறார்.
சட்டவிரோத செயல்களுக்கு கிடுக்கிப்பிடி, பணியில் ஒழுங்கீனமாக இருந்த இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை போலீஸ்காரர் மீது நடவடிக்கை,இடமாற்றம் போன்ற அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் அமைக்கப்பட்டுள்ள 'டெடிகேட்டட் பீட்' திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தும் பணியை மேற்கொண்டுள்ளார். பள்ளி, கல்லுாரி மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு, போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மட்டும் விதித்துவந்தனர். தற்போது, 'ஸ்பாட் பைன்' முறையில் விதிமீறல்களுக்கு உடனடியாக போலீசார் அபராதத்தை வசூலித்து வருகின்றனர்.
'அவுட் ஸ்டேஷன்' திறப்பு
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பெயருக்கு இயங்கி வந்த 'அவுட் போலீஸ் ஸ்டேஷனை முழுமையாக இயக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு மற்றும் வழக்குகள் குறித்து போலீசாருடனான ஆலோசனை கூட்டத்தில் விபரங்களை கேட்டு பெறுவதுடன் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பணியில் அலட்சியமாக இருக்கும் போலீசாரை கண்டிக்கவும் தயங்கவில்லை.
கஞ்சா கட்டுப்படுத்த தனிப்படை
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:
திருப்பூரில் குற்றத்தடுப்பு நடவடிக்கை பலவற்றை செய்து வருகிறோம். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கவும், குற்றங்களை கண்டறியவும், சட்டவிரோத செயல்கள், குற்றங்களில் தொடர்புடையவர்கள் பதுங்கல் போன்றவற்றை கண்காணிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் இயங்கி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், டூவீலர் ஸ்டாண்டுகளில் நீண்ட காலமாக நிற்கும் டூவீலர் குறித்து விசாரிக்கின்றனர். அதில், திருட்டு வாகனங்கள் உள்ளதா என்பதை பார்த்து வருகின்றனர். சிறிய அளவிலான லாட்ஜ்களில் ஆய்வு செய்கின்றனர்.
ரயில்கள் வரும் நேரங்களில் கஞ்சா கடத்தல் தொடர்பாக கண்காணிக்கின்றனர். இதன் வாயிலாக ரயில்களில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தினர் கைது செய்யப்பட்டனர். விடுதிகளில் சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தவர்களும் சிக்கி உள்ளனர். 'டெடிகேட்டடு பீட்' திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். கூடுதலாக போலீசார் நியமிக்க உள்ளோம். இரு 'ஷிப்ட்'களாக பார்த்து வருகின்றனர். ஸ்பெஷல் டீமில் உள்ளவர்களை நியமித்து, மூன்று 'ஷிப்ட்' களாக மாற்ற ஆலோசனை செய்கிறோம்.