குட்கா விற்றவர் கைது
செரங்காடு அருகே நல்லுார் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், மணிகண்டன், 28 என்பவர் குட்கா விற்று வருவது தெரிந்தது. அவரை கைது செய்து, 2 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் மீது குண்டாஸ்
திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் கஞ்சா வழக்கு தொடர்பாக பீஹாரை சேர்ந்த சர்ஜீராவ் மோஹிதே, 44, பாக்யஸ்ரீ கம்பாலே, 42, ராஜ் ஸ்ரீ, 35 என, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
நகை, பணம் திருடியவர் கைது
வீரபாண்டி, பொதிகை நகரை சேர்ந்தவர் மாலதி, 52. அப்பகுதியில் உள்ள மருத்துவமனை முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, டூவீலரில் இருந்த அரை சவரன் நகை, 6,500 ரூபாய் திருடு போயிருந்தது. வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். விருமாண்டி, 50 என்பவர் திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
போன் திருடிய 2 பேர் கைது
திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பிரபு, 31 என்பவர், மொபைல் போன் திருடு போனதாக வடக்கு போலீசில் புகார் செய்தார். விசாரணையில், மொபைல் போனை திருடிய அஜீஸ் சேவியர், 35 என்பவரை கைது செய்து, போனை பறிமுதல் செய்தனர்.
l திருப்பூர் சாமளாபுரத்தை சேர்ந்தவர் சேர்ம செல்வன், 40. மொபைல் போன் திருட்டு தொடர்பாக மங்கலம் போலீசில் புகார் அளித்தார். திருட்டில் ஈடுபட்ட சார்லஸ், 40 என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
போதையில் காரை ஓட்டி விபத்து
வீரபாண்டி, கல்லாங்காட்டை சேர்ந்த சச்சின், 22 என்பவர், மதுபோதையில் நேற்று முன் தினம் இரவு காரை ஓட்டினார். அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஓட்டி, அங்கிருந்த தள்ளுவண்டி கடை மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். கடை உரிமையாளர் உதயகுமார், 38 புகாரின் பேரில், திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
சீட்டாட்டம்: 9 பேர் கைது
வெள்ளகோவில், லக்குமநாயக்கன்பட்டியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ள கோவில் எஸ்.ஐ., சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து மேற்கொண்டனர். காமாட்சியம்மன் கோவில் அருகே சீட்டாட்டத்தில் ஈடுபட்ட தங்கராஜ், 47, மூர்த்தி, 50, ராகவேந்திரன், 31, கமலகண்ணன், 44, தனசேகர், 50, செந்தில்முருகன், 55, சந்தோஷ்குமார், 37, பிரபு, 43, பிரசாத், 45 என, ஒன்பது பேரை போலீசார் கைது செய்து, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருப்பூர் வடக்கு போலீசார் ராமையா காலனியில் ரோந்து மேற்கொண்டனர். கஞ்சா விற்று வந்த பீஹாரை சேர்ந்த வீரேந்திர குமார், 23, காமேஸ்வரர் குமார் யாதவ், 19 என, இருவரை கைது செய்து, 1.1 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
கிணற்றில் மூழ்கி முதியவர் பலி
ஊத்துக்குளி, பள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டுசாமி, 55. நேற்று முன்தினம் கூனம்பட்டி, பெரியதோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்த போது, நீரில் மூழ்கினார்.
அங்கிருந்த சிறுவர்கள் சத்தம் போட்டனர். பின், அவரை கிணற்றில் இறங்கி தேடி பார்த்து கிடைக்கவில்லை. ஊத்துக்குளி தீயணைப்பு வீரர்கள் தேடியும் பயனில்லை. நேற்று காலை மீண்டும் தேடிய போது சடலமாக மீட்டனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
போன் பறித்த 4 பேர் கைது
பிச்சம்பாளையம் பூம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி, 40; பனியன் தொழிலாளி.
அப்பகுதியில் நடந்து சென்றபோது, நால்வர் திருமூர்த்தியை மிரட்டி மொபைல்போனை பறித்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, போயம்பாளையத்தை சேர்ந்த அஜீத்குமார், 25, யுவராஜ், 25, நவீன், 20, அஜ்மீர் கான், 25, ஆகியோரை கைது செய்து மொபைல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.