வியாபாரி வீட்டில் நகை திருட்டு
காங்கயம், புதுவாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் சர்மா, 57; தேங்காய் பருப்பு வியாபாரி. குடும்பத்துடன் கடந்த, 1ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தால், பீரோவில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டு, 2 சவரன் நகையை சிலர் திருடி சென்றது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி, 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு வருகின்றனர்.
குளத்தில் ஆண் சடலம் மீட்பு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம் பேபி வாய்க்காலில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று, அழுகிய நிலையில், மிதந்து வந்த, 60 வயது மதிக்கதக்க சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்கு மாட்டி பெண் தற்கொலை
முருகம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி, 32. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியின்றி இருந்தார். மனமுடைந்து இருந்த அவர், வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.