சிறுமியிடம் அத்துமீறல்; சிறுவன் கைது
காங்கயத்தை சேர்ந்த, 12 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பின், பலமுறை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்டார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுவனை காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வில் கைது செய்தனர்.
கார் மோதி முதியவர் பலி
காங்கயத்தை சேர்ந்தவர் சீரங்கன், 60. செம்மலவலசு காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார், சீரங்கன் மீது மோதியதில் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலருக்கு தீ; 4 பேர் கைது
இடுவாய் ஊராட்சி, பாரதிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 30. அதே பகுதியை சேர்ந்தவர் நண்பர் ஸ்ரீகாந்த், 25. இருவருக்குமிடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஸ்ரீகாந்த் கீழே விழுந்தார். இப்பிரச்னை குறித்து ஸ்ரீகாந்த், நண்பர்கள் விக்னேஷ், 24, சரவணன், 25, சிவக்குமார், 23 ஆகியோரிடம் கூறி, வெங்கடேஷின் வீட்டுக்கு அழைத்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஸ்ரீகாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த டூவீலருக்கு தீ வைத்து எரித்து சென்றார். மங்கலம் போலீசில் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
இளைஞர் மர்ம மரணம்
சேவூர் அடுத்த குட்டகம் அருகே திருமலை கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக், 30. கூலித்தொழிலாளி. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு செல்லும்போது ஏழுர் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் டூவீலருடன் விழுந்து பலத்த காயங்களு டன் இறந்துகிடந்தார். டூவீலரில் வரும் போது நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தாரா, வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.