
மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பழமருதுார் கிராமத்தை சேர்ந்தவர் சிவநேசன், 62. குடும்பத்தினருடன் பல்லடத்தில் வசிக்கிறார்; தனியார் நிறுவனம் ஒன்றில் சிவநேசன் பணிபுரிகிறார். இவரது மகள் ஷிவானி, 15, அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று காலை குடும்பத்தினர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஷிவானி துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பல்லடம் போலீசார் விசாரித்தனர். 'பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் கண்டித்ததால் அவர் மனமுடைந்திருந்ததே தற்கொலைக்கு காரணம்'' என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்கள் தற்கொலை
ஊத்துக்குளி, எம்.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் விக்ரம், 24. இவரது மனைவி கிருத்திகாதேவி, 19. இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். தம்பதிக்கு, பத்து மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 19ம் தேதி கிருத்திகாதேவி துாக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
பொங்கலுார் மஞ்சப்பூரை சேர்ந்த சந்திரன் மனைவி சித்ரா, 23; டெய்லர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியில் சித்ரா போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தீயில் வீடு சேதம்
திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகர், இரண்டாவது வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 51; செகண்ட்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த, ஐந்து மாதங்களாக வீட்டில் குடியிருந்து, செகண்ட்ஸ் பனியன் வியாபாரம் செய்து வந்தார். வீட்டில், இரண்டு மூட்டை பனியன்கள் இருந்தது. நேற்று காலை, வெளியே சென்றிருந்தார். மதியம், வீட்டுக்குள் இருந்து கரும்புகை வெளியே வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், பார்த்தசாரதிக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சென்ற தெற்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதில், பனியன், வீட்டில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. சென்ட்ரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீயில் கருகி முதியவர் பலி
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, பொன்னாபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 60. இவர் கடந்த, ஐந்து ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சரிவர நடக்க முடியாமல் படுத்தபடுக்கையாக இருந்தார். 19ம் தேதி இரவு படுக்கையில் படுத்தபடி, புகைபிடிப்பதற்காக, தீக்குச்சியை பற்ற வைத்து, துாக்கி வீசிய போது, தீ பெட்ஷீட்டில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. தீயில் கருகிய அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா கடத்தியவர் கைது
பீஹாரில் இருந்து கேரளா செல்லும் ரயில் மூலமாக கஞ்சா பொட்டலம் கடத்தி வருவதாக திருப்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். எர்ணாகுளம் செல்லும் ரயிலில் இருந்து சந்தேகப்படும் விதமாக வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் ஷா, 27 என்பதும், திருப்பூரில் விற்பனை செய்வதற்காக பீஹாரில் இருந்து, 4 கிலோ கஞ்சாவுடன் பாட்னா வரைக்கும் பஸ்சில் பயணம் செய்து, பின் அங்கிருந்து, திருப்பூருக்கு ரயிலில் வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 4 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.