பஸ் 'டைமிங்' பிரச்னை: 4 பேர் கைது
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊத்துக்குளி வழியாகவும், புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக ஈரோட்டுக்கு செல்லக்கடிய, இரு தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி கொண்டு கிளம்பியது. டைமிங் பிரச்னை தொடர்பாக, இரு பஸ்களும் உரசியது. பஸ்களின், இரு டிரைவர், நடத்துனருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகளை வைத்து கொண்டு, இதுபோல், தகராறில் ஈடுபட்டது குறித்து தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார், டிரைவர், நடத்துனர்களான நடேசன், தினேஷ், ஹரிகரன், சேகர் என, நான்கு பேரை கைது செய்தனர்.
டிப்பர் லாரி மோதி ஒருவர் பலி
சூலுாரை சேர்ந்தவர் ரங்கநாதன், 54. இவர் டூவீலரில் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் பல்லகவுண்டன்பாளையம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அதே ரோட்டில் வந்த டிப்பர் லாரி திடீரென எந்த சிக்னலும், சைகையும் காட்டாமல் லாரியை நிறுத்தினார். அப்போது டூவீலர் லாரியின் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த அவரை மீட்டு பெருந்துறைக்கு கொண்டு சென்ற போது இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவி இறந்த துக்கம்: கணவன் தற்கொலை
ஊத்துக்குளி, எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 76. இவர் கடந்த, மூன்று ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். கடந்த, மூன்று மாதம் முன்பு மனைவி இறந்தார். இதன் காரணமாக, மனைவி இறந்த துக்கத்தால் கணவர் மனமுடைந்து இருந்தார். நேற்று முன்தினம், எறும்பு பவுடரை தண்ணீரில் கலந்து ராமசாமி குடித்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
குழந்தை திருமணம்: வாலிபர் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர், 14 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நவ., மாதம் சிறுமி மாயமானார். பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அதே பகுதியை சேர்ந்த வாலிபர் செந்தில்குமார், 22 என்பவர் அழைத்து சென்றிருப்பார் என்று காங்கயம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அழைத்து சென்று திருமணம் செய்து, அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. புகாரின் பேரில், வாலிபரை 'போக்சோ' வில் கைது செய்து, சிறுமியை மீட்டனர்.