பணம் பறிப்பு; மூன்று பேர் கைது
திருப்பூர், காங்கயம் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார், 32; பனியன் தொழிலாளி. இவர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ராஜ்குமார், 42 என்பவர், சதீஷ்குமாருக்கு, 1.50 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார். வாங்கிய பணத்தை கொடுக்க காலதாமதம் ஏற்பட்டது. ராஜ்குமார், தனது நண்பர்கள் சக்திவேல், தமிழ் ஆகியோருடன் சென்று பணம் கேட்டு தகராறு செய்தார். சதீஷ்குமாரின் வங்கி கணக்கில் இருந்த, 30 ஆயிரம் ரூபாய், டூவீலரை எடுத்து சென்றனர். புகாரின் பேரில், நல்லுார் போலீசார் ராஜ்குமார், சக்திவேல், தமிழை கைது செய்தனர்.
டிராக்டர் மோதி லாரி டிரைவர் பலி
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 41; லாரி டிரைவர். இவர் நேற்று டூவீலரில் முத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். முத்துார் - ஆலம்பாளையம் ரோட்டில் சென்ற போது நம்பகவுண்டம்பாளையத்தில் அவ்வழியாக வந்த டிராக்டர் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைபலனின்றி அவர் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். மங்கலம், பரமசிவம்பாளையம் அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், சூலுாரில் தங்கியுள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபிரா நாராயண், 25, ஒடிசாவை சேர்ந்த பிரபாத் ராஜ்கன்சா, 29 என்பது தெரிந்தது. இருவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
டூ வீலர் மோதி ஒருவர் பலி
பொங்கலுார், கரியாம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துரத்தினம், 42. பெருந்தொழுவில் இருந்து முதலிபாளையம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். எதிரில் வந்த டூவீலர் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துரத்தினம் பலியானார். விபத்து குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாய ஆலை ஊழியர் துாக்கில் தற்கொலை
பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சக்திவேல், 33. சின்னக்கரையில் குடும்பத்துடன் வசிக்கிறார். சக்திவேல், அப்பகுதியிலுள்ள சாய ஆலை நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, விசாரணை நடத்தி வரும் பல்லடம் போலீசார் தெரிவித்தனர்.

