கஞ்சா விற்ற இருவர் கைது
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் நல்லுார் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், செட்டிபாளையத்தை சேர்ந்த பிரித்திவ்ராஜ், 20; கோவில்வழியை சேர்ந்த சேதுராமன், 25 என்பது தெரிந்தது. இருவரும் திண்டுக்கல்லில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்று வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி கைது
திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ், 47; ஷோபா தயாரிக்கும் ஊழியர். நேற்று முருங்கைகாய் பறிக்க பக்கத்து வீட்டுக்கு சென்றார். அந்த வீட்டை சேர்ந்த, 22 வயது இளம்பெண், முருங்கை கீரை, முருங்கைகாய் பறித்து கொண்டிருந்தார். அப்போது, அப்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் தாஸை கைது செய்தனர்.
தொழிலாளி மீது தாக்குதல்
பல்லடம் அடுத்த, பெரும்பாளியை சேர்ந்தவர் அக்பர் அலி 30; கூலி தொழிலாளி அக்பர் அலிக்கும், இவரது அண்ணன் அபுதாகீர், 34 என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, நண்பர்கள் இருவருடன் வந்த அபுதாகீர், கத்தியால் அக்பர் அலியை தாக்கி காயப்படுத்தினார். படுகாயம் அடைந்த அக்பர் அலி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அபுதாகீர், நண்பர்கள் உசேன், 19, முகமது ஆசிக், 21 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
தொழிலாளி மீது 'போக்சோ'
பொங்கலுார் பகுதியை சேர்ந்தவர் பாபு என்கின்ற முனுசாமி, 25; கட்டடத் தொழிலாளி. 13 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் முனுசாமியை 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.