பைக்குகள் மோதல்; மெக்கானிக் பலி
பல்லடம் அடுத்த, சுல்தான்பேட்டை, வி.சந்திராபுரத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் ஹரிபிரசாத் 27; டூவீலர் மெக்கானிக். நேற்று காலை,
ஹரிபிரசாத், பைக்கில் வந்து கொண்டிருந்தார். அருகே, இவரது உறவினர் கோபிநாத் என்பவர் மற்றொரு பைக்கில் வந்தார். வாரப்பட்டி - சந்திராபுரம் செல்லும் ரோட்டில், அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த கோபிநாத், அருகே, ஹரிபிரசாத் சென்று கொண்டிருந்த பைக்கின் முன்புற வீலில் மோதியதாக கூறப்படுகிறது. இருவரின் பைக்குகளும் நிலைதடுமாறி ரோட்டோர மரத்தின் மீது மோதின. பலத்த காயமடைந்த இருவரும், பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹரிபிரசாத், சிகிச்சைக்கு முன்பே இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் காயம்
ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவிலை சேர்ந்தவர் செல்வம், 50. நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே மடவிளாகம் கோவிலுக்கு, தங்கள் சொந்த லோடு ஆட்டோவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மொத்தம் 12 பேர் வந்துள்ளனர். பரஞ்சேர்வழி அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு ரோட்டோரம் ஒதுங்கியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இதில், சங்கமித்ரா, 23, கனிஷ்கா, 23, பாக்கியலட்சுமி, 75 ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மீது கார் மோதல்; டிரைவர் பலி
வெள்ளக்கோவில், மாந்தபுரத்தை சேர்ந்தவர் முருகேசன், 43; டிரைவர். நேற்று முன்தினம், டூவீலரில் முத்துார் சென்று விட்டு இரவு, 11:30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் அருகே பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. பலத்த காயமடைந்த முருகேசனை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.