பள்ளி மாணவர் மாயம்
திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டை சேர்ந்தவர், 13 வயது சிறுவன். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தங்கையுடன் பள்ளிக்கு சென்று திரும்பினார். பின், டியூசனில் இருந்து தங்கையை அழைத்து வருவதாக சென்ற சிறுவன் மாயமானார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.
மது விற்ற இருவர் கைது
கணபதிபாளையம் ரோட்டில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த, இருவரிடம் விசாரித்தனர். தெற்குபாளையம் பிரிவை சேர்ந்தவர் வினோத்குமார், 26 மற்றும் திருமூர்த்தி, 23 என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 100 மதுபாட்டில், மூன்று கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
தாராபுரம், குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 39, தொழிலாளி. இவர் நேற்று வீட்டருகே உள்ள கிணற்று திட்டில் படுத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்தார். தகவலின் பேரில், தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், அவரை சடலமாக மீட்டனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அதில், வில்சன், 39 என்பது தெரிந்தது. சோதனையில், விற்பனைக்கு கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து, 3.5 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.