UPDATED : செப் 02, 2026 09:17 PM
ADDED : செப் 02, 2026 09:12 PM
வெள்ளகோவில் அருகே கம்பளியாம்பட்டியைச் சேர்ந்தவர் சரசாள், 70. நேற்று மாலை காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பஸ் ஸ்டாண்டுக்குள் சென்ற ஜெயங்கொண்டத்துக்கு செல்லும் அரசு பஸ், சரசாள் மீது மோதியது. இதில், அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிராக்டர் திருடிய இருவர் கைது
படியூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 45. இவர் கடந்த மாதம் 20-ம் தேதி தனது டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர், டிராக்டர் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த சுதாகர், 45, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தீபக்குமார்,33 ஆகிய இருவரும் டிராக்டரை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, திருடப்பட்ட டிராக்டரை மீட்டனர்.
வாகனம் திருடியவருக்கு 'கண்காணிப்பு'
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹார்வி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த தினேஷ் அரவிந்த் என்பவரின் வாகனத்தை கடந்த 2024 பிப்., 19ல், ஜனார்த்தனன், 31 என்பவர் திருடி சென்றார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், திருப்பூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்ராஜா, நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இரண்டாண்டு ஜனார்த்தனன் இருக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில், வக்கீல் ஹேமா ஆஜரானார்.
