கஞ்சா விற்றவர்கள் கைது
திருப்பூர் வடக்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்க போலீசார், ரயில்வே ஸ்டேஷன் அருகே, சோதனை நடத்தினர். சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, ரீத்தா, 28, மஞ்சு, 26 இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்பது கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மது விற்றவர் கைது
திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக, 15 வேலம்பாளையம் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜெயச்சந்திரன், 27 என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 180 மி.லி., அளவுள்ள, 14 மதுபாட்டில் மற்றும் 5,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கார் மோதி முதியவர் பலி
காங்கயம், ஒட்டப்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 60. நேற்று முன்தினம் டூவீலரில் ஊத்துக்குளியில் இருந்து கவுண்டம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.நால் ரோட்டில் திரும்பிய போது, அவருக்கு முன்னால் சென்ற கார் திடீரென சைகை காட்டாமல் திரும்பியது. அதே ரோட்டில் எதிர்திசையில் வந்த மற்றொரு கார், டூவீலர் மீது மோதி பன்னீர்செல்வம் துாக்கி வீசப்பட்டு, மற்றொரு டூவீலர் மீது விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், பன்னீர்செல்வம் மற்றும் கவுதம், 32 ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், பன்னீர்செல்வம் பலியானார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.