/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்து காணப்படும் போலீஸ் குடியிருப்பு; தவிக்கும் போலீஸ் குடும்பத்தினர்
/
சிதிலமடைந்து காணப்படும் போலீஸ் குடியிருப்பு; தவிக்கும் போலீஸ் குடும்பத்தினர்
சிதிலமடைந்து காணப்படும் போலீஸ் குடியிருப்பு; தவிக்கும் போலீஸ் குடும்பத்தினர்
சிதிலமடைந்து காணப்படும் போலீஸ் குடியிருப்பு; தவிக்கும் போலீஸ் குடும்பத்தினர்
ADDED : நவ 21, 2024 09:20 PM

உடுமலை ; உடுமலையிலுள்ள போலீஸ் குடியிருப்பு, பராமரிக்கப்படாமல், புதர் மண்டியும், கட்டடங்கள் சிதிலமடைந்து எந்நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது. இதனை புதுப்பிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை கச்சேரி வீதி பகுதியில், உடுமலை டி.எஸ்.பி., அலுவலக வளாகம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், போலீஸ் குடியிருப்பு உள்ளது. டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள், 5 எஸ்.ஐ., மற்றும் போலீசார் என, 80 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
கடந்த, 2012ம் ஆண்டு, கட்டி திறக்கப்பட்ட நிலையில், அனைத்து வீடுகளிலும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
மேலும் இங்குள்ள கட்டடங்கள் சிதிலமடைந்தும், மேற்கூரை அவ்வப்போது உடைந்து விழுவதோடு, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அங்கு ஆபத்தான சூழலில் போலீசார், குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
மேலும், கழிவு நீர் குழாய்கள் அனைத்தும் உடைந்து, கட்டடத்திற்குள் விழுந்து வருகிறது. கட்டட வளாகம் முழுவதும், செடி, கொடிகள் முளைத்தும், புதர்களாக மாறியுள்ளதோடு, கழிவுகள் அகற்றப்படாமல், பல இடங்களில் மலைபோல் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால், வீடுகள் சேதமடைவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது.
கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதோடு, புதர் மண்டி காணப்படுவதால், அங்கு வசிப்பவர்களுக்கு, காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
மேலும், சுவர்கள் விரிசல் அடைந்தும், மின் வயர்கள் அறுந்தும், வளாகத்தை சுற்றிலும் புதர் மண்டியும் அவல நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் நடமாட்டமும் அவ்வப்போது இருந்து வருகிறது.
அதே போல், போலீஸ் குடியிருப்புக்கு என, சிறுவர்கள், பெரியர்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால், அதுவும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், அங்கு உலா வரும் விஷஜந்துக்களால் பெரும் அச்சமடைந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில், குழந்தைகளை வெளியே அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர். சுற்றிலும், அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், அரசு பள்ளி உள்ள நிலையில், துர்நாற்றம் அடித்து வருகிறது. மேலும், பல்வேறு பணிகளுக்கான, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் பாதித்து வருகின்றனர்.
எனவே, போலீஸ் குடியிருப்பிலுள்ள வீடுகளை புதுப்பிக்கவும், முறையாக பராமரிக்கவும், உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என போலீஸ் குடும்பங்களை சேர்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.