/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்றங்கள் தடுக்க போலீஸ் குழுக்கள் ரோந்து
/
குற்றங்கள் தடுக்க போலீஸ் குழுக்கள் ரோந்து
ADDED : டிச 23, 2024 11:24 PM

திருப்பூர்; மாவட்டத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க, சப்-டிவிஷன் பகுதிகளில் 'ஸ்குவாட்' முறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு, வாகன திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.
சமீபத்தில் பல்லடம் அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தற்போது, இவ்வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லாமல், ஆரம்ப கட்ட விசாரணையிலேயே இருந்து வருகிறது.
இதையடுத்து, குற்றங்களை தடுக்கும் வகையில் எஸ்.பி., உத்தரவின் பேரில், கிராம புறங்கள், பண்ணை வீடுகளில் தனியாக வசிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் சந்திப்பு கூட்டங்களை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சப்-டிவிஷன் வாரியாக அந்தந்த பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் 'ஸ்குவாட்' (தனி குழுக்கள்) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், காங்கயம் டி.எஸ்.பி., மாயவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, நகர் முழுவதும் மக்கள் கூடும் பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது.
காங்கயத்தில், 12 இடங்களில் பி.ஏ.பி., வாய்க்கால் கரையோரம் பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு, மர்ம நபர்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் 'சிசிடிவி' கேமரா பொருத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போலீசார் வழங்கி வரும் விழிப்புணர்வு நோட்டீஸில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:
l குடியிருப்பு பகுதிகள், தோட்டத்து சாலைகள், முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தவும்.
l இரவு நேரங்களில் வீட்டை சுற்றி மின் விளக்குகளை எரிய விட வேண்டும்.
l வளர்ப்பு நாய்கள் வைத்திருங்கள்.
l வெளியூர் போகும் சமயங்களில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தால், தங்கள் வீடுகள் போலீசாரால் கண்காணிக்கப்படும்.
l விலை உயர்ந்த நகைகள் மற்றும் அதிகமான பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
l இரவு நேரங்களில் யாரேனும் வீட்டின் கதவை தட்டினால், சந்தேகம் ஏற்பட்டால் அருகில் இருப்பவர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை வரவைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
l அவசர காலங்களில், '100' என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
l குடியிருப்பு பகுதிகளில் இரவு காவலாளி போட்டு பாதுகாக்கவும்.
l பகல் மற்றும் இரவு நேரங்களில் சந்தேகப்படும் படியாக யாரேனும் நடமாடினால் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தரவும்.
l சாணை பிடிக்க வருவோர், போர்வை வியாபாரி, ஸ்டவ் ரிப்பேர் என்ற பெயரில் வருபவர்களிடம் கவனமாக இருக்கவும்.
l தங்களது டூவீலர், கார்களை பூட்டி வைக்க வேண்டும்.