உரிமம் புதுப்பிக்க மறுக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியம்: பிரின்டிங் நிறுவனங்கள் அதிர்ச்சி
உரிமம் புதுப்பிக்க மறுக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியம்: பிரின்டிங் நிறுவனங்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 14, 2026 06:04 AM

திருப்பூர்: உரிமம் புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் மறுப்பதால், திருப்பூரில் இயங்கி வரும், 'நிட் பிரின்டிங்' நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பின்னலாடை உள்ளிட்ட ஆயத்த ஆடை உற்பத்தியில், 'நிட் பிரின்டிங்' தொழில்நுட்பம் மிக முக்கியமானது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு, பிரின்டிங் அத்தியாவசியமாக மாறியுள்ளது. கடந்த, 2014ம் ஆண்டு வரை, 'ஆரஞ்ச்' வகைப்பாட்டில் இருந்து வந்த பிரின்டிங் தொழில், 'சிவப்பு' வகைப்பாட்டுக்கு மாற்றப்பட்டது.
மாசுகட்டுப்பாடு வாரியத்தில், ஓராண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வருவதாக கூறி, பிரின்டிங் ஆலைகளுக்கு, உரிமம் புதுப்பிக்க மாசு கட்டுப்பாடு வாரியம் மறுக்கிறது.
கடந்த மூன்று வாரங்களாக, உரிமத்தை புதுப்பித்து கொடுக்காமல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் புறக்கணிப்பது, தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் மீதான உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து 'திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் (டெக்பா) அசோசியேஷன்' தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''கடந்த 30 ஆண்டுகளாக, பிரின்டிங் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அதன்பின், சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் உருவாகியுள்ளன. தற்போது, கலப்பு குடியிருப்பு என்பதால், உரிமம் புதுப்பிக்க முடியாது என்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் மறுக்கிறது. பிரின்டிங் ஆலைகளால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
மாசுக்கட்டுப்பாடு வாரியம் திடீரென உரிமம் புதுப்பிக்காமல் மறுப்பது நியாயமல்ல; இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நேரில் சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
