/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பால் நீரின்றி வறண்டு காணப்படும் குளம்; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்பால் நீரின்றி வறண்டு காணப்படும் குளம்; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பால் நீரின்றி வறண்டு காணப்படும் குளம்; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பால் நீரின்றி வறண்டு காணப்படும் குளம்; மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 09, 2025 09:43 PM
உடுமலை ; மடத்துக்குளம் அருகே, நீர் வழித்தடம் மற்றும் குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா, மைவாடி கிராமத்தில், 17.59 ஏக்கர் பரப்பளவில் கருப்புசாமி புதுார் குளம் உள்ளது. சுற்றுப்புறத்திலுள்ள, 10 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக இருந்தது.
10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு கிணறு, போர்வெல் என நிலத்தடி நீர் ஆதாரமாகவும், குளத்திற்குள், 10 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பெரிய அளவிலான கிணறு உள்ளது.
சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழை நீர், பெரிய அளவிலான ஓடைகள் வழியாக வந்து, குளத்திற்குள் கலந்து வந்தது. கடந்த, 20 ஆண்டுக்கு முன், கல் குவாரிகள் அமைக்கும் போது, குளத்தின் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, முற்றிலும் அழிக்கப்பட்டது.
இதனால், குளம் வறண்டு, சுற்றுப்புற கிராமங்களில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தின் நீர் வழித்தடங்கள் மற்றும் குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்க வேண்டும், என விவசாயிகள் தரப்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது.
பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றச்செல்லும் அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர்.
தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மழை நீரை சேமிக்கவும், சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களிலுள்ள கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில், குளத்தின் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் பாதுகாப்புடன், பாரபட்சமின்றி முழுமையாக அளவீடு செய்து, குளம் மற்றும் குளத்தின் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.