/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளம் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்
/
குளம் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்
ADDED : ஆக 11, 2024 10:56 PM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட எல்லையில் முதலில் அமைந்துள்ள நொய்யல் குளம், சாமளாபுரம் குளமாகும். அந்தக் குளம் நிரம்பி வழிந்தால், உபரிநீர் பள்ளபாளையம் குளத்துக்கு செல்கிறது.
அடுத்ததாக செம்மாண்டம்பாளையம் குளம், ஆண்டிபாளையம் குளம், மூளிக்குளம், மாணிக்காபுரம் குளம், அணைப்பாளையம் குளம், கத்தாங்கண்ணி என, குளங்கள் வரிசையாக உள்ளன.
ஆண்டிபாளையம் குளத்துக்கு, மங்கலம் நல்லம்மன் தடுப்பணை மற்றும் ஒட்டணையில் இருந்து, நொய்யல் தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டிபாளையம் குளத்துக்கு, இரண்டு வாய்க்காலில் தண்ணீர் வருவதால், வேகமாக நிரம்பியது. கடந்த, ஆடிப்பெருக்கு நாளில் குளம் நிரம்பியது.
அன்று அதிகாலை, 3:00 மணி முதல் தொடர்ந்து 10வது நாளாக இன்றும் குளம், உபரிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. குளத்தில் இருந்து வரும் மீன்களை பார்த்து, சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர். குளத்தில், நீண்ட நாட்களாக தேங்கியிருந்த தண்ணீர் வெளியேறி, நொய்யலில் வரும் மழைநீரை தேக்கி வைக்க வேண்டும்.
அதற்காகவே, தண்ணீர் வரத்து இருக்கும் அளவுக்கு, குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது.
-----
பாட்னாவுக்கு சிறப்பு ரயில்
திருப்பூர், ஆக. 12-
பீஹாருக்கு அதிகரிக்கும் கூட்ட நெரிசலை தவிர்க்க, வெள்ளிதோறும், 20 முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரயில், பாட்னாவுக்கு இயங்குமென அறிவிக்கப் பட்டுள்ளது.
வரும், 16, 23, 30 மற்றும், செப்., 6ம் தேதி, வெள்ளிதோறும் இரவு, 11:00 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்படும் ரயில் (எண்:06085) சனி அதிகாலை, 3:25 க்கு கோவையையும், 4:15க்கு திருப்பூரையும் கடக்கும்; திங்கள் அதிகாலை, 3:30க்கு பாட்னா சென்று சேரும்.
மறுமார்க்கமாக, ஆக., 19, 26, செப்., 2 மற்றும், 9ம் தேதி, திங்கள் தோறும் இரவு, 11:45 க்கு பாட்னாவில் புறப்படும் ரயில் (எண்:06086) வியாழன் காலை, 10:30 க்கு எர்ணாகுளம் சென்று சேரும். முன்னதாக, வியாழன் மதியம், 2:33க்கு திருப்பூரையும், 3:37க்கு கோவையையும் இந்த ரயில் கடக்கும்.
இந்த ரயிலில், இரண்டு படுக்கை வசதி முன்பதிவு பெட்டிகளும், 20 முன்பதிவில்லா பொது பெட்டிகளும் இருக்கும். அதிகளவில், முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், உடனடி சாதாரண டிக்கெட் பெற்று, இந்த ரயிலில் பயணிக்க முடியும்.
---
குருபூஜை விழா
அவிநாசி, ஆக. 12-
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் 91வது குருபூஜை பெருவிழா கொண்டாடப்பட்டது.
ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் வரும் நாள், குருபூஜை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை; சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராண வரலாற்றை கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பாராயணம் செய்தனர்.
முன்னதாக செல்வ விநாயகர், பாதிரி மரத்தம்மன், லிங்கேஸ்வரர், அம்பாள், சுப்ரமணியர், நால்வர் பெருமக்கள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
சுவாமி - அம்பாள், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனாருடன் நான்கு ரத வீதியிலும் திருவீதி உலா வந்தனர்.
மாலையில் வெள்ளை யானை வாகனத்தில் சுந்தரர், குதிரை வாகனத்தில் சேரமான் பெருமான் நாயனார் திருவீதி வலம் வந்து இறைவனடி பற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் செய்திருந்தார்.
---
திருவிளக்கு பூஜை:
தாராபுரம்
தாராபுரம் ஜவுளி கடை வீதியில், ராஜகுல ஸ்ரீமுத்தம்மா பேரண்டாலு அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் 45வது ஆண்டு விழா முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் நிர்வாக குழு பொருளாளர் சீதாராமன் தலைமை வகித்தார். ேகாவில் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். உலக அமைதி, மக்கள் நலம், தொழில் வளம், மழை வளம் பெருக வேண்டி திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
---
'காங்கயம், தாராபுரத்தில், தலைமை அரசு மருத்துவமனை'
திருப்பூர், ஆக. 12-
''திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் ஆகிய இடங்களில் புதிதாக தலைமை அரசு மருத்துவமனை அமைக்கப்படும். தேவையான மருத்துவ கட்டமைப்பு உருவாக்கப்படும்'' என, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
திருப்பூர், வேலம்பாளையத்தில் புதிதாக கட்டியுள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின், அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பலரும் திருப்பூரில் வந்து பணியாற்றுவதால், அதற்கேற்ப மருத் துவ கட்டமைப்பை தொடர்ந்து உயர்த்த வேண் டியது அவசியமாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 23 துணை சுகாதார நிலையங்கள் 6.10 கோடி மதிப்பிலும், 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5.84 கோடி மதிப்பிலும் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் பி.சி.ஆர்., லேப் மற்றும் கூடுதல் கட்டடம், 9.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு மாற்றாக, காங்கயம், தாராபுரம் ஆகிய இரண்டு இடங்களிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமையும். தாராபுரம் வட்டார அரசு மருத்துவமனை, 24 கோடி ரூபாயில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது; விரைவில் திறக்கப்படும்.
காங்கயத்தில், 12 கோடி ரூபாயில் பணி நடந்து வருகிறது. அவிநாசி அரசு மருத்துவமனையில், ஐந்து கோடியில் குழந்தை நலச்சிறப்பு பிரிவு கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில் தான், 24 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான பணிகள் ஒரே நேரத்தில் நடந்து, புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.
ஆய்வின் போது, கலெக்டர் கிறிஸ்துராஜ், தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ராமசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி, மாநகர நகர் நல அலுவலர் கவுரிசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-----
'ஜீவசமாதி வழிபட்டால்
நல்வாழ்வு'
திருப்பூர், ஆக. 12-
சித்தர்கள் மகரிஷிகள் ஜீவசமாதி புனரமைப்பு வழிபாடு அறக்கட்டளை, திருப்பூரில் இயங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சித்தர்களின் ஜீவசமாதி புனரமைப்பு பணிகளுடன், பக்தர்களை அழைத்து சென்று வழிபாடும் நடத்தப்படுகிறது.
திருப்பூரில் இருந்து, ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், ஜீவசமாதி தரிசனம் செய்யும் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சித்தர் ஜீவசமாதிகளுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
அறக்கட்டளை தலைவர் பிரதோஷ சிவா, செயலாளர் ஞானவேலன் கூறுகையில், 'சித்தர்கள், பிரபஞ்ச உயிர் மிக்க ஆற்றலுடன ஜீவசமாதி அடைந்து, வாழும் மனிதர்களின் பிரச்னைகளை தீர்க்க, எதிர்பார்ப்பின்றி நன்மையை செய்து வருகின்றனர். இதுபோன்ற ஜீவசமாதிகளை மக்கள் தரிசனம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
சித்தர் கோவிலை தரிசிப்பதன் வாயிலாக, மனித கர்மாவுக்கு தீர்வு கண்டு, குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வழிபிறக்கும்,' என்றனர்.
---
கொட்டாங்குச்சியால் உடுக்கை
திருப்பூர், ஆக. 12-
அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாத்திரத் தொழிலாளி, கொட்டாங்குச்சியால், உடுக்கையை உருவாக்கியுள்ளார்.
அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பாத்திரத் தொழிலாளி ஆனந்தன், 52 வேங்கைப்பால் ஓவியம் வரைவதில் தொடங்கி, மரச்சிற்பங்கள் வடிவமைப்பிலும் கைதேர்ந்தவராக விளங்குகிறார். பழங்கால இசைக்கருவிகளை மீட்டெடுக்கும் நோக்கில் பனை முரசு, கின்னாரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை புதிய வடிவில் அவற்றை உருவாக்கியுள்ளார்.
உடுக்கை, பெரும்பாலும் மரம் மற்றும் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. இதைக் கொட்டாங்குச்சியில் (தேங்காய் தொட்டி) செய்ய முடிவெடுத்தார். தேக்கு மரத்துண்டால், இணைப்புகள் கொடுத்து இரு தேங்காய் மூடிகளை வைத்து உடுக்கையை உருவாக்கியுள்ளார். தோல் கட்டினால் உடுக்கை அடிப்பதற்குத் தயாராகிவிடும்.
'பழங்கால இசைக்கருவிகளை அருங்காட்சியகத்தில் பார்க்கும்போது, இவற்றைப் புதிதாக உருவாக்கத் தோன்றும். நான் உருவாக்கிய இசைக்கருவிகளில் இசை மீட்கப்படும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி.
புதிதாக உருவாக்கிய இசைக்கருவிகளை தொல்லியல் துறையினரின் ஆதரவுடன் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்க விரும்புகிறேன்'' என்று கூறுகிறார் ஆனந்தன்.
---
உள்நாட்டு இயந்திரங்கள் உற்பத்தி
பின்னலாடை துறைக்கு சாதகம்
திருப்பூர், ஆக. 12-
பின்னலாடை தொழில், கடந்த 40 ஆண்டுகளாக நம் நாட்டில் வேர் விட்டு வளர்ந்து இன்று ஆல மரமாகத் திகழ்ந்தாலும், உற்பத்தி இயந்திரங்களுக்கு சீனா போன்ற நாடுகளையே இன்றளவும் சார்ந்திருக்கிறோம்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தால், உள்ளூர் மற்றும் உள்நாட்டில் இயந்திரங்களை வடிவமைப்பது, வரும் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒரு பின்னலாடை தயாராக பல்வேறு துறைகள் பணியாற்றுகின்றன; அதிநவீன இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. நுாலிழையை துணியாக்கும் 'நிட்டிங்' இயந்திரம்; துணிக்கு சாயமிடும் இயந்திரம்; சலவை செய்த துணியின் சுருக்கத்தை போக்கி, உற்பத்திக்கு தயார்படுத்தும், 'காம்பாக்டிங்' மற்றும் 'ரைசிங்' இயந்திரம்; மதிப்பு கூட்டிய ஆடை உற்பத்திக்கு அடிப்படையாக இருக்கும், பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் இயந்திரம் உள்ளிட்ட 11 வகை இயந்திரங்கள் என சங்கிலித்தொடராக இணைந்து பின்னலாடை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், 10க்கும் மேற்பட்ட வகையிலான தையல் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
முதலிடத்தில் சீனா
பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் வடிவமைப்பில், சீனா இன்றும் முன்னோடியாக இருக்கிறது. ஜப்பான், தைவான், கொரியா போன்ற நாடுகள் இதற்கு அடுத்தடுத்த இடங்களை வகிக்கினறன.
பின்னலாடைத் தொழில், நம் தேசத்தில் கால்பதித்த, 40 ஆண்டுகளுக்கு பிறகே, தேவையான இயந்திரங்களை வடிவமைக்கும் முயற்சி துவங்கப்பட்டது.
'மேக் இன் இந்தியா'
இதன் காரணமாக, பின்னலாடைத்தொழில் மட்டுமல்ல, பல்வேறு தொழில்களும், புதிய தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட இயந்திரங்களுக்காக, சீனா போன்ற நாடுகளையே நம்பியிருக்கின்றன. மத்திய அரசு, கடந்த ஏழு ஆண்டுகளாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்கு வித்து வருகிறது. அதற்கு பிறகுதான், சாயமிடும் இயந்திரம்; நிட்டிங் இயந்திரம்; பிரின்டிங் இயந்திரம் போன்றவற்றை தமிழகத்தில் வடிவமைக்கும் முயற்சி துவங்கி, வெற்றிகரமாக மாறி வருகிறது.
புதிய தொழில்நுட்பத்தை 'அப்டேட்' செய்து, இயந்திரங்களை வடிவமைப்பதில், நாம் பின்தங்கித்தான் இருக்கிறோம். சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, தைவான் போன்ற நாடுகளே முன்னோடியாக இருக்கின்றன.
மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்ப அறிவு நிறைந்த நம் நாட்டு இளைஞர்களுக்குக் கரம் கொடுத்தால்தான், நமது தேவைக்கான இயந்திரங்களை நாமே வடிவமைக்கும் தன்னிறைவை எட்ட முடியும் என்கின்றனர் தொழில்துறையினர்.
---
மாநகரில் மழை
திருப்பூர், ஆக. 12-
திருப்பூர் மாநகர பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து, குளுமையானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர் நகர பகுதிகளில் கடந்த வழக்கம்போல், நேற்றும் காலை முதலே வெயில் வாட்டி வந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. மாலை, 6:00 மணி முதல் பரவலாக மழை பெய்யத்துவங்கியது. அரை மணி நேரம் வரை, கன மழையாக பெய்தது. அதன்பின் மிதமான மழை நீடித்தது. இரவிலும் தொடர்ந்து பெய்துகொண்ட இருந்தது.
'ஷாப்பிங்' பாதிப்பு
சனிக்கிழமை வாரச்சம்பளம் பெறும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் பலரும், விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்றைய மாலை நேர மழையால், திருப்பூரில் சண்டே ஷாப்பிங் பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். காதர்பேட்டையில்ஆடை வர்த்தக கடைகள், குமரன் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு உள்பட நகரின் பிரதான சாலைகளில் உள்ள மளிகை, எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி விற்பனை நிறுவனங்கள், மாலை நேரத்தில் நுகர்வோர் வருகையின்றி, வெறிச்சோடின.
நஞ்சப்பா பள்ளி, குமரன் ரோடு பகுதிகளில் சாலையோர வர்த்தகர்கள், ஆடைகளை தார்பாயால் மூடிவைத்தனர்.
கடந்த ஒரு வாரமாகவே வெயில் தாக்கம் அதிகரிப்பால், திருப்பூரில் இரவு நேரம் உஷ்ணம் அதிகரித்து காணப்பட்டது. நேற்றைய மழையால், வெப்பம் தணித்து, குளுமையானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
---
நிட்ேஷா நிறைவு
ரூ.250 கோடி வர்த்தக விசாரணை
திருப்பூர், ஆக. 12-
அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த மூன்று நாள் 'நிட் ஷோ' - 2024' கண்காட்சியை, 27 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்; 250 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் 'நிட் ஷோ' கண்காட்சி, கடந்த, 25 ஆண்டுகளாக திருப்பூரில் நடைபெற்று வருகிறது; அதன்படி, 22வது கண்காட்சி, காங்கயம் ரோடு 'டாப் லைட்' மைதானத்தில், 9ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது.
'நிட்டிங்', பிரின்டிங், டிஜிட்டல் சூயிங், கட்டிங், எம்ப்ராய்டரி இயந்திரங்கள்; பிரின்டிங் சாயம், கெமிக்கல், ஆயத்த ஆடை உற்பத்திக்கான 'அசசரீஸ்'; இயந்திர உதிரி பாகங்கள், சோலார், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், சர்வீஸ் சென்டர்கள் என, 400 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அலைமோதல்
துவக்க விழாவில் பங்கேற்ற தொழில் அமைப்பினர், தங்கள் உறுப்பினர்கள் கட்டாயம் கண்காட்சியை பார்த்து பயன்பெற வேண்டுமென, சுற்றறிக்கை அனுப்பினர்.
பின்னலாடை தொழில்துறையினர், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர், நேரில் பார்வையிட்டனர். திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான புதுவகை மெஷின்கள் குறித்தும் வர்த்தக விசாரணை நடத்தியுள்ளனர். நிறைவு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதல் கூட்டம் அலைமோத துவங்கியது.
ஐந்து அரங்குகளில் உள்ள, 1.50 லட்சம் சதுரடி பரப்பில் அமைக்கப்பட்ட, பெரும்பாலான ஸ்டால்களை பார்த்துவிட்டு ஒருவர் வெளியேற மூன்று மணி நேரமானது.
திருப்புமுனை
'நிட்ேஷா' கண்காட்சி அமைப்பாளர் கிருஷ்ணா கூறியதாவது:
திருப்பூரில் இதுவரை நடத்திய கண்காட்சிகளில் இல்லாத அளவுக்கு, 22வது கண்காட்சியை அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர், பார்த்துள்ளனர். வர்த்தக விசாரணையும் நடத்தியுள்ளனர்.
அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரான புதுவகை மெஷின்கள் அணிவகுத்திருந்ததால், நேரில் இயக்கி பார்த்து, சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர்.
'மேக் இன் இந்தியா' இயந்திரங்கள், வெளிநாட்டு இயந்திரங்களுக்கு போட்டியாக, வர்த்தக விசாரணை நடத்தியுள்ளன. கடந்த மூன்று நாட்களில், 27 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்; 250 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ள சரியான நேரத்தில் நடந்த 'நிட்ேஷா' கண்காட்சியால், திருப்பூர் பின்னலாடை தொழிலில் மாபெரும் திருப்புமுனையாக அமையும் என, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-----------------
மாற்றத்திறனாளிக்கு இலவச செயற்கைக்கால் அளவீடு
திருப்பூர், ஆக. 12-
சக் ஷம் அமைப்பு மற்றும் பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், திருப்பூர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.
சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வன், நற்பணி மன்ற தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு செயற்கை கால்களுக்கான அளவீடு செய்யப்பட்டது.
கண் பரிசோதனை முகாமில் நான்கு பேர், இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். துளசி பார்மஸி சார்பில், 55 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.
முருகம்பாளையத்தை சேர்ந்த சுகந்தி என்கிற பெண்ணுக்கு, கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக கார்த்திக் ராமசாமி என்பவர் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
----
மீன் விற்பனை சுறுசுறுப்பு
திருப்பூர்:
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 60 டன் கடல் மீன், 20 டன் அணை மீன்கள் என, 80 டன் மீன்கள் விற்பனைக்கு குவிந்தது. கடந்த வாரம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையால் மீன் விற்பனை மந்தமானது. நடப்பு வாரம் விற்பனையை எதிர்பார்த்து, அதிகாலை 2:00 மணிக்கே மீன் வியாபாரிகள் கடை விரித்தனர்.
அதற்கு கை மேல் பலனாக, மீன்களை வாங்கிச் செல்ல வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. காலை 10:00 மணிக்குள் 50 சதவீத மீன்கள் விற்றுத்தீர்ந்தன. கடந்த வாரம் மாலை வரை நடந்த மார்க்கெட், நடப்பு வாரம் மீன் விற்பனை அதிகரித்ததால், மதியமே நிறைவு பெற்றது. மீன் விற்பனை சுறுசுறுப்பாக இருந்ததாக, மொத்த மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நேற்று மட்டன், சிக்கன் இறைச்சி கடைகளிலும், வழக்கத்தை விட சற்று கூட்டம் அதிகமாக இருந்தது.
---
ரேஷன் ஊழியர்களின் கோரிக்கைகள்
திருப்பூர், ஆக. 12-
கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலர் ராதாகிருஷ்ணனிடம், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதியம் உடனடியாக அறிவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பொருள்களுக்கு இருப்பு குறைவுக்கு விதிக்கப்படும் அபராதம் ரத்து செய்ய வேண்டும். அயல் பணி, பணி நிரவல், வெளி மாவட்ட மாறுதல், நிரந்தர மாற்றம் செய்தல் போன்றவற்றை மண்டல இணை பதிவாளர் மேற்கொள்ளும் வகையில் அதிகாரம் வழங்க வேண்டும். பணி வரன்முறைப்படுத்தாத இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும்.
நுகர் பொருள் வாணிப கழக பணியாளர்களே ரேஷன் கடைகளுக்கு நகர்வு பணியை மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடற்ற மளிகை பொருட்களுக்கு ஆன்லைனில் கொள்முதல் செய்ய வேண்டும். வெளிப்படை தன்மையுடன் இவை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு, தரமாகவும் விலை குறைவாகவும் தர வேண்டும்.
உரிய தேதியில் ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி உள்ளதால், அரசே நேரடியாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி ரேஷன் கடைகள், பண்டகசாலை ரேஷன் கடைகள், மார்க்கெட்டிங் சொசைட்டி கடைகள், அர்பன் சொசைட்டி கடைகள் போன்ற அனைத்து ரேஷன் கடைகளையும் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில், 20 சதவீத போனஸ், 10 சதவீதமாக குறைக்கப்பட்டதை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. மொத்தம் 22 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
---
மரம் வெட்டி சாய்ப்பு
போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்
திருப்பூர், ஆக. 12-
திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய் நகரைச் சேர்ந்தவர் தனபால். கடந்த இரு நாள் முன் அவர் வசிக்கும் வீதியில் மரத்தை சிலர் வெட்டிச் சாய்த்தனர். இதை தனபால் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மரத்தை வெட்ட ஆட்களை அனுப்பிய அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தன் குடும்பத்தினருடன் தனபால் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததோடு, தனபால் மற்றும் அவரது மனைவியை கடுமையான வார்த்தைகளால் பேசினர். தனபாலை சரமாரியாகத் தாக்கினர்.
தகவல் அறிந்து பல்வேறு தன்னார்வ அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள் நேற்று காலை நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர்.தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர்.
''தாக்குதல் சம்பவம் குறித்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது. நடவடிக்கை எடுக்கப்படும்'' என போலீசார் அவர்களிடம் உறுதியளித்தனர்.