/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2024 12:18 AM

திருப்பூர், : திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை, சாமளாபுரம் பேரூராட்சி, திருப்பூர் ரோட்டரி சங்கம் இணைந்து, சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், விழாவை துவக்கி வைத்தார். குளக்கரையில், 101 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. உறியடி, சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டன.
பெருஞ்சலங்கை, தப்பாட்டம், பறையிசைத்தல், கரகாட்டம், வள்ளி கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் 'கல...கல...'
சாமளாபுரத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ், தமிழர் பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திடல் வரை, மாட்டு வண்டியில் பயணித்தார். சிலம்பம் சுற்றினார்.
உறியடி போட்டியில், கலெக்டரின் கண்களை துணியால் கட்டி, அவரை சுற்றிவிட்டனர். அசராத கலெக்டர், சரியாக நகர்ந்து சென்று, அந்தரத்தில் தொங்கிய பானையை அடித்து உடைத்தார்.
தங்கள் ஊரில் நடந்த பொங்கல் விழாவில், மக்களோடு மக்களாக கலெக்டர் பங்கேற்றது, அப்பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.