/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பண்டிகை ஷாப்பிங் மும்முரம்
/
பொங்கல் பண்டிகை ஷாப்பிங் மும்முரம்
ADDED : ஜன 05, 2026 05:18 AM

திருப்பூர்: பொங்கல் பண்டிகை நெருங்குவதால், திருப்பூரில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் பர்னிச்சர் கடைகளில், விடுமுறை தினமான நேற்று வர்த்தகம் களைகட்டியிருந்தது.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரபல ஜவுளிக்கடைகள், வேட்டி நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. பொங்கலுக்கு, ஒன்பது நாட்களே இருப்பதால், நேற்று திருப்பூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.
பண்டிகை கால பின்னலாடை விற்பனைக்கு, காதர்பேட்டை கடைகள் பரபரப்புடன் காணப்பட்டன. இங்கு ஏற்றுமதி தரம் வாய்ந்த ஆடைகள் துவங்கி, தினசரி வீடுகளில் இருக்கும் போது அணியும் காஷூவல் ஆடைகள் வரை, அனைத்து ஆடைகளும் கிடைக்கின்றன. பிறந்த குழந்தைகள் துவங்கி, சிறுவர் -சிறுமியர், இளைஞர் - இளம்பெண்கள், முதியோர்கள் என, அனைத்து தரப்பினரும் அணியும் தரமான ஆடைகளும் குவிக்கப்படுகின்றன.
மார்கழி மாதம் துவங்கும் முன்னதாகவே, குளிர் அதிகரித்துவிட்டதால், உல்லன் போன்ற துணியில் தயாரிக்கும் 'லுாப்நெட்' ஆடைகள் விற்பனை சூடுபிடித்தது. கெட்டியான துணியில் தயாரிக்கப்படும் ஆடைகள், 100 முதல், 200 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விட்ட பிறகு, கடந்த வாரம், கூட்டம் களைகட்டியது.
திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள், குடும்ப சகிதமாக குழந்தைகளுடன் வந்து, ஆடைகளை வாங்கிச்சென்றனர். குறிப்பாக, மதியத்துக்கு பிறகு, இரவு, 10:00 மணி வரை, சில்லரை வியாபாரம் பரபரப்பாக நடந்தது.
பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால், நேற்றும் காதர்பேட்டை வியாபாரம் சூடுபிடித்திருந்தது. வாரந்தோறும் மிதமான வியாபாரம் நடந்தாலும், தீபாவளி, பொங்கல் பண்டிகை கால விற்பனை ஒவ்வொரு ஆண்டும் கைகொடுக்கும். நேற்றும் காதர்பேட்டை சுற்றுப்பகுதிகளில், தற்காலிக கடை அமைத்து, பண்டிகைகால விற்பனை களைகட்டியிருந்தது.
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு விற்பனையில், பர்னிச்சர் கடைகள், மொபைல்போன் கடைகளும் ஈடுபட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள்குவிந்திருந்தனர்.

