ADDED : ஜன 08, 2024 01:25 AM

பொங்கல் பரிசு பெற தகுதியானோர் யார்; யாருக்கு தகுதி இல்லை என்கிற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகுப்புக்கு தகுதியானோர் பட்டியல், அந்தந்த மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளோருக்கு மட்டும், பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது. எந்த நாளில், எந்த நேரத்தில் பரிசு தொகுப்பு பெறவேண்டும் என்கிற விவரங்கள் அச்சிடப்பட்ட டோக்கனை, ரேஷன் பணியாளர்கள், வீடுவீடாக சென்று வழங்கிவருகின்றனர். டோக்கன் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வினியோகம் துவங்குகிறது.
பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, 663 டன் பச்சரிசி; 663 டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த ரேஷன் கடை களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. ''வரும் 9ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், ரேஷன் கடைக்கு சென்று, பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். டோக்கன் பெறுவதற்காக, கார்டுதாரர்கள் யாரும் ரேஷன் கடைக்கு செல்லவேண்டாம்.
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை, 0421 2218455 என்கிற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் 1077 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மாநில அளவில் புகார்களை, 1967, 1800 4255901 என்கிற இலவச எண்களில் தொடர்புகொண்டுதெரிவிக்கலாம்'' என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.