/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
7.56 லட்சம் கார்டுதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
/
7.56 லட்சம் கார்டுதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
7.56 லட்சம் கார்டுதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
7.56 லட்சம் கார்டுதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
ADDED : ஜன 15, 2024 01:29 AM
திருப்பூர்:ரேஷனில் அரிசி பெறும் கார்டுகளுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. 7 லட்சத்து 97 ஆயிரத்து 616 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு பெறும் பயனாளிகள் பட்டியலில் உள்ளனர். அனைத்து ரேஷன் கடைகளிலும், கடந்த 10ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது.
டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று, கை ரேகை பதிவு செய்து, பரிசு தொகுப்பு பெற்றுவந்தனர்.
திருப்பூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6.15 லட்சம் சேலை; 5.95 லட்சம் வேட்டி வந்து சேர்ந்தது. இதையடுத்து, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச - வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது.
போகி பண்டிகை தினமான நேற்றும், ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கின; டோக்கன் பெறாத தகுதியுள்ள பயனாளிகள், விடுபட்டோர், பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுச்சென்றனர். நேற்று வரை, மாவட்டத்தில், 7 லட்சத்து 56 ஆயிரத்து 263 கார்டுகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது; 41,353 குடும்பங்கள் இன்னும் பரிசு தொகுப்பு பெறவில்லை.
குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அரிசி கார்டுதாரர்களில், இதுவரை 94.8 சதவீதம் பேர் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுள்ளனர். பயோமெட்ரிக் பதிவு செய்தே, பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனால், கார்டுதாரர் அல்லாதோர் பரிசு தொகுப்பு பெறமுடியாது.
உடல் பாதிப்புகளால் ரேஷன் கடைகளுக்கு வர இயலாமை, முதியோர், வெளியூர் பயணம் காரணமாக பலரும் இன்னும் பரிசு தொகுப்பு பெறாமல் உள்ளனர். முந்தைய ஆண்டுகளில், பொங்கலுக்கு முன் 98 முதல் 99 சதவீத பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவிடும். அந்தவகையில் தற்போது, பரிசு தொகுப்பு பெற்ற கார்டுதாரர் விகிதம் குறைவாகவே உள்ளது.
விடுபட்டோருக்காக, பொங்கல் பண்டிகைக்குப் பின்னரும் பரிசு தொகுப்பு வழங்கலை நீட்டித்து அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நேற்று நிலவரப்படி, திருப்பூர்
மாவட்டத்தில், 41,353 குடும்பங்கள்
இன்னும் பரிசு தொகுப்பு பெறவில்லை.