/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
501 பானைகளில் பொங்கல் நொய்யல் கரையோரம் விழா
/
501 பானைகளில் பொங்கல் நொய்யல் கரையோரம் விழா
ADDED : டிச 31, 2024 04:40 AM
திருப்பூர் : நொய்யல் நதிக்கரையில், 501 பொங்கல் வைத்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், திருப்பூர் பொங்கல் திருவிழா கொண்டாட, 'ஜீவநதி நொய்யல்' சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூரில் நொய்யல் ஆற்றை மீட்டு, பராமரித்து வருவதில், 'ஜீவநதி நொய்யல்' சங்கம், பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம்(நிட்மா) முக்கியத்துவம் அளித்து வருகின்றன. கடந்த, 15 ஆண்டுகள் முன், அவற்றை துார்வாரி சுத்தப்படுத்தி, மக்கள் இயக்கமாக மாற்றி, நொய்யலை பராமரித்து வருகின்றனர்.
கஜலட்சுமி தியேட்டர் அருகே, இருபுறமும் படித்துறையுடன் சிறுபாலம் அமைத்து, தண்ணீரை தேக்கி, பரிசல் விட்டும், வாண வேடிக்கையுடனும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்தாண்டும், தை பொங்கல் விழாவை, சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். 'நிட்மா', ஜீவநதி நொய்யல் சங்கம், திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் தெற்கு ரோட்டரி சார்பில், நொய்யல் பொங்கல் விழா -2025' வரும் ஜன., 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நொய்யல் கரையில், மத ஒற்றுமை மற்றும் பொதுநலன் வேண்டி, 501 பொங்கல் வைத்து வழிபாடு நடக்க உள்ளது.
அன்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி துவங்கும்; காவடி ஆட்டம், வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டத்தை தொடர்ந்து வழிபாடு நடக்கும்.
காலை, 7:20 மணிக்கு, நொய்யல் தென்கரையில் உள்ள கமலவிநாயகர் கோவிலில் பொங்கல் வழிபாடு நடக்க உள்ளது. தொடர்ந்து, 8:00 மணி முதல், 10:30 மணி வரை, விகடகவி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாலை, 4:30 மணி முதல், மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நொய்யல் மற்றும் 'மெட்ரோ' ரயில் திட்டம் தொடர்பான பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.
கலெக்டர் தலைமையில் நடக்க உள்ள பொங்கல் விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.