ADDED : ஜூலை 21, 2024 12:33 AM

பொன்னுாஞ்சல் உற்சவம்
ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பொன்னுாஞ்சல் உற்சவம் நடந்தது.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு, அதிகாலையில் அபிேஷக பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, சந்தனகாப்பு, சவுரி முடி அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். ஸ்ரீவிசாலாட்சியம்மன் உற்சவருக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, பொன்னுாஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடி வெள்ளியின் ஒரு பகுதியாக, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் சுவாமி கோவிலில், பொன்னுாஞ்சல் உற்சவம் கொண்டாடப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட ஆண்டாள் உற்சவரை, பொன் ஊஞ்சலில் வைத்து, பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பாராயணம் பாடி வழிபாடு செய்தனர்.
ராஜகோபுரம் கட்ட ஆயத்தம்!
பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், பழமை வாய்ந்த பொன்காளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி துவங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை சமீபத்தில் அனுமதி வழங்கியது. தற்போது, இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
முன்னதாக, கோவில் வளாகத்தில், தனியார் பயன்பாட்டில் இருந்து வந்த குடியிருப்பு அகற்றப்பட்டு, 2 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட்டது.
விரைவில், தனியார் பயன்பாட்டில் உள்ள மீதமுள்ள இடங்களும் கையகப்படுத்தப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணிகள் துவங்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டுப் போட்டிகளை, சிறுபூலுவபட்டி, ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்துகிறது.
போட்டி அட்டவணை, போட்டி நடத்துவது, நடுவர் குழு பணி நியமனம் குறித்து, பள்ளி உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பிரியா வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 'விளையாட்டு போட்டிகளின் போது வீரர், வீராங்கனைகளுக்கு காயம் ஏற்படக்கூடாது. நடுநிலை தவறாமல் போட்டியை நடத்த வேண்டிய பொறுப்பு பள்ளிக்கு உண்டு. எனவே, அனைத்து நிலையிலும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் வடக்கு குறுமைய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஜெரால்டு, பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஒருங்கிணைத்தனர். குறுமையை இணைச்செயலாளர்கள் இளவரசன், நல்லசிவம், ஞானவேல், சௌமியா, ஜெயலட்சுமி, உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார்.
ஓட்டலில் அலுவலர் ஆய்வு
வாடிக்கையாளரின் புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர், புதுக்காடு பகுதியில் உள்ள ஓட்டலில், கெட்டு போன சிக்கன் விற்பனை செய்யப்பட்டதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு புகார் அனுப்பப்பட்டத. விளைவாக, உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, அக்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''புகார் தெரிவிக்கப்பட்ட கடையில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, கெட்டுப் போன இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலறையை சுத்தம், சுகாதாரத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறு சுழற்சிக்கு வழங்கும் திட்டத்தில் இணைய வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேயரிடம் வேண்டுகோள்
நாச்சிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கேட்டு மாநகராட்சியில் மேயரிடம் முறையிட்டனர்.
திருப்பூர் அருகே நாச்சிபாளையம் ஊராட்சி, ரங்கம்பாளையம் பகுதியில் ஜி.எம்.,கார்டன் உள்ளது. 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர், வடிகால், தெரு விளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இவற்றை ஏற்படுத்தித்தர வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாநகராட்சிஅலுவகத்தில் மேயர் தினேஷ்குமாரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது: ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி முறையிட்டோம். இதற்காக, ஊராட்சி தலைவரை, 10 முறைக்கு மேல் நேரில் சென்று சந்தித்தும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதி மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குறுமைய ஆலோசனை
காங்கயம் குறுமைய அளவிலான தனிநபர், குழு விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், வெள்ளகோவில், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் பேசுகையில்,' விளையாட்டு போட்டிகளுக்கான விதிகளை, போட்டி துவங்கும் முன்பாக வீரர், வீராங்கனைகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும். போட்டி நடக்கும் மைதானத்தில் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு, குடிநீர் வசதி, நிழலுக்கு சாமியானா பந்தல் உள்ளிட்டவை இருப்பதை போட்டி நடத்தும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்,' என்றார்.
முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை வகித்தார். வெள்ளகோவில், காங்கயம் வட்டார அரசு, தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆக., முதல் வாரத்தில் குறுமைய போட்டிகளை துவங்க முடிவெடுக்கப்பட்டது. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.
'பார்' ஊழியர்கள் கைது
பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, காளிநாதம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 37; பனியன் தொழிலாளி. அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெரால்டு, 25 மற்றும் ஆரோக்யசாமி, 25. இருவரும், அய்யம்பாளையம் டாஸ்மாக் 'பாரில்' உதவியாளர்கள்.
நேற்று முன்தினம் மாலை, சதீஷ்குமார் டூவீலரில் சென்றபோது, ஜெரால்டு மற்றும் ஆரோக்யசாமி காரில் வந்தனர். கார் மீது டூ வீலர் உரசிய நிலையில், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சதீஷ்குமாரை, ஜெரால்டு, ஆரோக்கியசாமி ஆகியோர் தாக்கி காயப்படுத்தினர்.
இதையடுத்து, சதீஷ்குமார், தனது உறவினர்கள், ஜெரால்டு வீட்டை முற்றுகையிட்டனர். இதில், உருட்டு கட்டையால் தாக்கியதில், சதீஷ்குமார் காயமடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார், ஜெரால்டு, ஆரோக்கியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிக்கண்ணா அணி வெற்றி
சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி சார்பில், கல்லுாரி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. ஆறு அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் நேற்று, அவிநாசி அரசு கலைக்கல்லுாரி அணியும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி அணியும் மோதின.
முதலில் பேட் செய்த அவிநாசி அணி, 16.5 ஓவரில், 71 ரன் எடுத்து, 'ஆல் அவுட்'டானது. தொடர்ந்து, பேட்டிங் செய்த சிக்கண்ணா கல்லுாரி அணி, 7.1 ஓவரில், 74 ரன் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், பொருளியல் துறை தலைவர் விநாயகமூர்த்தி போட்டிகளை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து, 22ம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளது.