ADDED : அக் 22, 2024 12:08 AM

பல்லடம் அடுத்த, காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சுக்கம்பாளையம் பகுதியில், விசைத்தறிகள், விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன. தொழில் துறையினர், பல்லடம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த இரண்டு மாதமாக, தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேகமூட்டம் ஏற்பட்டாலே மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆர்டர்களை சரிவர முடிக்க முடியவில்லை. பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டியுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகளின் போது, சேதமடைந்த உதிரி பாகங்களை மாற்றி, இது போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மின்வாரிய சேவைகள் திருப்திகரமாக இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேற்பார்வை பொறியாளர் திருஞானசம்பந்தம், ''இனி, பிரச்னைகள் ஏற்படாது'' என்று உறுதி கூறினார்.
