/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி நவீனம்; ஆர்வம் குறைவு ஏன்?
/
விசைத்தறி நவீனம்; ஆர்வம் குறைவு ஏன்?
ADDED : டிச 28, 2025 07:03 AM
அ திக முதலீடு செய்ய வேண்டும் என்ற காரணத்தால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்கள், தறிகளை நவீனப்படுத்த ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. தறிகளை நவீனப்படுத்த வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்படி, 3 ஆயிரம் விசைத்தறிகளை நவீனப்படுத்த, 30 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இதை தொடர்ந்து, அரசு மானியத்துடன் விசைத்தறிகள் நவீனப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால், குறு, சிறு விசைத்தறியாளர்கள் பலர் இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
விசைத்தறியாளர்கள் கூறியதாவது:
விசைத்தறி தொழிலை தொடர்ந்து செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள் மட்டுமே தறிகளை நவீனப்படுத்த முயற்சி மேற்கொள்வர். தற்போதுள்ள தலைமுறைகள் மட்டுமே இந்த தொழிலை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. அடுத்த தலைமுறையினர் இத்தொழிலை மேற்கொள்வார்களா என்பது கேள்விக்குறியே. கூடுதல் செலவு செய்து தறிகளை நவீனப்படுத்த யாரும் தயாராக இல்லை.
அவ்வாறு செலவு செய்தாலும், கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றால் அது குறித்து யோசிப்பர். ஆனால், நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலில், கூடுதல் வருவாய் என்பது சாத்தியமில்லை.
விசைத்தறிகளை நவீனப்படுத்த, அரசு அளிக்கும் மானியம் போக, ஒரு தறிக்கு ஒரு லட்சம் ரூபாய் என செலவு செய்ய வேண்டும். இது, பெரிய அளவில் தொழில் செய்பவர்களால் மட்டுமே முடியும் என்பதால், சிறிய அளவில் தறி தொழில் செய்பவர்களுக்கு இதுசாத்தியமில்லை.
அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையிலும், விரல்விட்டு என்னும் அளவுக்கான விசைத்தறியாளர்களே தறிகளை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசை போன்று மத்திய அரசும் இதற்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய அரசின் மானியம் வேண்டும்: விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது. இதன் வாயிலாக, உற்பத்தி செய்யும் துணிகளின் தரமும் நன்றாக உள்ளது. விசைத்தறிகளை காட்டிலும், 10 சதவீத உற்பத்தி கூடுதலாக கிடைக்கும் என்பதுடன், தொழிலாளர் தேவை குறையும் என்பதாலும், இத்திட்டம், விசைத்தறியாளர்களுக்கு பயனுள்ளது. ஆனால், இதற்காக முதலீடு செய்வதற்குத்தான் குறு, சிறு விசைத்தறியாளர்கள் பெரிதும் யோசிக்கின்றனர். தற்போதைய சூழலில், தொழிலில் பெரிய அளவு முன்னேற்றம் இல்லை என்பதும் இன்னொரு காரணம். எனவே, தறிகளை நவீனப்படுத்த மத்திய அரசும் மானியம் அளித்து உதவினால், குறு, சிறு விசைத்தறியாளர்கள் நவீனத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது.
- -பாலசுப்பிரமணியம்: செயலாளர்:

