/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று முதல் விசைத்தறி 'ஸ்டிரைக்'
/
இன்று முதல் விசைத்தறி 'ஸ்டிரைக்'
ADDED : மார் 18, 2025 11:52 PM

அவிநாசி; கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
தெக்கலுார் மையம் சார்பில் பொதுக்குழு கூட்டம் கொங்கு வேளாளர் கலையரங்கத்தில் நடைபெற்றது. செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொருளாளர் நடராஜ், சுப்பிரமணியம், கோபால், புதுப்பாளையம் தலைவர் நடராஜ், பி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம், சிவகுமார் உள்ளிட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு கேட்டு ஒப்பந்த கூலியை குறைத்து வழங்காத வகையில் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி தர வலியுறுத்தி, பல போராட்டம் நடத்தி, 32 முறை மனு கொடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை என்பதால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நாளை (இன்று) முதல் துவங்குவது, போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து விசைத்தறியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தறிகளை இயக்குவதில்லை.
சொந்த பாவு நுால், நாட்டின் மிஷன், வேன், ஆட்டோ, வேஷ்டி சேலை ரகங்கள் ஓட்டும் விசைத்தறி உரிமையாளர்களையும் ஆதரவு தர கேட்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெக்கலுார் சங்க நிர்வாகி சிவகுமார் கூறுகையில், ''கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது எனவும், இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் நான்கு லட்சம் பேர் பாதிப்படைவர்,'' என்றார்.