ADDED : ஜூன் 24, 2025 12:35 AM

திருப்பூர்; தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 18 வயதுக்கு உட்பட்ட மாநில அணித்தேர்வு சேலத்தில் நடந்தது. இதில், 14 வீராங்கனையர் அடங்கிய தமிழக அணி தேர்வு செய்யப்பட்டது.
இந்த அணியில் திருப்பூரில் இருந்து பங்கேற்ற, ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஜன்யாஸ்ரீ இடம் பெற்றார்.ஜூன், 12 முதல், 23 வரை சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மாநில அணிக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஜன்யாஸ்ரீ, வரும், 28 முதல் ஜூலை, 1ம் தேதி வரை நான்கு நாட்கள் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடக்கும் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்கிறார்.
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர் தமிழக அணியில் இடம் பெற்று, தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெற்றுள்ள, திருப்பூர் மாணவி, ஜன்யாஸ்ரீ, வீராங்கனைக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோரை, மாநில கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், மாவட்ட கபடி கழகத்தின் சேர்மன் கொங்கு முருகேசன், தலைவர் ரோலக்ஸ் மனோகரன், பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி மற்றும் கபடி கழக நிர்வாகிகள் பாராட்டினர்.