/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆயத்தம்: அதிகாரிகளுக்கு பயிற்சி தீவிரம்
/
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆயத்தம்: அதிகாரிகளுக்கு பயிற்சி தீவிரம்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆயத்தம்: அதிகாரிகளுக்கு பயிற்சி தீவிரம்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆயத்தம்: அதிகாரிகளுக்கு பயிற்சி தீவிரம்
ADDED : மார் 12, 2026 04:45 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027' மேற்கொள்வதற்கு அரசு அலுவலர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். முதல்கட்டமாக, தொழில்நுட்பம், மேற்பார்வை பணிகளில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் மேற்பார்வையாளர்கள் 80 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தாலுகா அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப பிரிவினருக்கு, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று துவங்கியது. மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் பிஜூ பயிற்சி அளித்தார்.
இந்த கணக்கெடுப்பு முதன் முறையாக, டிஜிட்டல் கருவிகள் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. கணக்கெடுப்பாளர்கள் தங்கள் மொபைலில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள HLO என்கிற பிரத்யேக செயலியை நிறுவிக்கொள்ள வேண்டும். மக்களில் பலர் இடம் பெயர்வோராக உள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் சென்று, கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆகவே முதல்கட்டமாக, மக்களின் வசிப்பிடங்களை பட்டியலிட்டு, எண் வழங்கப்படும்; நடப்பு 2026 ம் ஆண்டில் இப்பணிகள் நடைபெறும். அடுத்ததாக, வரும் 2027 ல், மக்களிடமிருந்து விவரங்களை பெற்று பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஒவ்வொரு வீடு வீடாக சென்று, விவரங்களை பெற்று, மொபைல் செயலி வாயிலாக பதிவு செய்யவேண்டும். வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புடன் கூடிய தொழில் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், கல்லுாரி, மருத்துவமனை உள்பட கட்டடங்களிலும், அந்த கட்டடங்களின் வகை, எதற்காக பயன்படுத்தப்படுகிறது; அங்கு வசிப்போர் விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்யவேண்டும்.
வீட்டில் உள்ள அறைகள் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை, சொந்த வீடு, வாடகை வீடு விவரங்கள்; தண்ணீர் வசதி, செலுத்தப்படும் வீட்டு வாடகை, கழிப்பிட வசதி, கழிவுநீர் வெளியேற்ற இணைப்பு, கேபிள் இணைப்பு, இணையதள இணைப்பு விவரங்கள்; கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் பயன்பாடு, சைக்கிள், பைக், கார், வேன் உள்ளனவா; குடும்பத்தினர் உட்கொள்ளும் உணவு தானிய வகைகள், மொபைல் போன் எண் என, 34 வகையான விவரங்களை கேட்டு, மொபைல்போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

