/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் கட்டுவதை தடுப்பதா? பொதுமக்கள் கொதிப்பு
/
கோவில் கட்டுவதை தடுப்பதா? பொதுமக்கள் கொதிப்பு
ADDED : டிச 09, 2025 07:50 AM

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையத்தில் அழகு மாயவர் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு, 2015ல் கற்கோவில் கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டு துவங்கியது. சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளுக்கு கோவிலை ஒட்டியே, வீட்டை கட்டி உள்ள அருக்காணி, செங்கப்பள்ளி கிராம உதவியாளராக பணிபுரியும் அவரது மகள் கவிதா ஆகியோர் இடையூறு செய்து வருவதாக ஊர் பொதுமக்கள், தாசில்தாரிடம் மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அளவீடு நடந்தது. கலெக்டர் உத்தரவின் பேரில், கோவில் கட்டுமானம் பணி துவங்கியது. உடனே, அருக்காணி உள்ளிட்டோர் உறவினர்களுடன் கட்டுமானப் பணிகளை தடுத்தும், வேலையாட்களை வேலை செய்ய விடாமல் மிரட்டலும் விடுத்தனர். தாசில்தார் சந்திரசேகரிடம், பொதுமக்கள் முறையிட்டனர். இப்பிரச்னை குறித்து, நேற்று தாசில்தார், தேவம்பாளையத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
தற்கொலை மிரட்டல் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இடையூறு செய்யக்கூடாது என அருக்காணி, கவிதா ஆகியோருக்கு அறிவுறுத்தினர். தாசில்தார் சென்ற பின், அருக்காணி உள்ளிட்டோர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து ஆட்களை வேலை செய்ய விடாமல் தடுத்ததுடன் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர்.
பொதுமக்கள் மனு இதையடுத்து கிராம பொதுமக்கள், நேற்று மதியம், மறியல் நடத்த அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் திரண்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் தடுத்ததால், தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அதன்பின், துணை தாசில்தார் கவுரியிடம், அருக்காணி, கவிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கோவில் திருப்பணி எந்தவித இடையூறின்றி தொடர போலீசாரின் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

