/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை சந்தையில் காய்கறிகள் விலை சரிவு
/
உடுமலை சந்தையில் காய்கறிகள் விலை சரிவு
ADDED : பிப் 22, 2024 05:24 AM

உடுமலை: உடுமலை சந்தையில், தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை குறைந்து காணப்பட்டது.
உடுமலை பகுதிகளில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. வழக்கமாக, தைப்பட்டத்தில் சாகுபடி அதிகளவு காணப்படும் நிலையில், நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.
நடப்பு சீசனில் வழக்கமாக, தினமும், 70 டன் காய்கறி வரத்து காணப்படும் நிலையில், நடப்பாண்டு, 30 டன் காய்கறிகள் மட்டுமே வரத்து காணப்படுகிறது.
இதனால், ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்தும், ஒரு சில காய்கறிகள் விலை சராசரியாகவும் காணப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தக்காளிச்செடிகள் காய்ந்தும், காய்கள் தரம் குறைந்தும் காணப்படுவதால், வரத்து குறைவாக இருந்தாலும், தக்காளி விலையும் குறைவாக காணப்படுகிறது.
நேற்று, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, ரூ.150 முதல், 200 வரை மட்டுமே ஏலம் போனது.
சின்ன வெங்காயம் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதால், விலை கடும் சரிவை சந்தித்து, நேற்று ஒரு கிலோ, ரூ. 20 முதல், 30 ரூபாய் வரை மட்டுமே விற்றது.
முருங்கை வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து, கிலோ, ரூ.85 வரை விற்பனையானது. கத்தரிக்காய், 20 கிலோ கொண்ட ஒரு மூட்டை, ரூ. 300 முதல், 400 ரூபாய் வரை விற்றது. ஒரு கிலோ சராசரியாக, 15 ரூபாய்க்கு விற்றது.
அதே போல், மிளகாய், கிலோ, ரூ.40, வெண்டை, ரூ.30, அவரை, ரூ.40 - 50, சுரைக்காய், ரூ. 10 முதல், 15, பாவற்காய், ரூ. 35, பீர்க்கன் காய், ரூ.35க்கு விற்பனையானது.