/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னுரிமை கடன்; ரூ.45,433 கோடி இலக்கு
/
முன்னுரிமை கடன்; ரூ.45,433 கோடி இலக்கு
ADDED : மே 27, 2025 11:47 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில், வங்கிகள் மூலம், 45,433 கோடி ரூபாய் முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், ஆண்டுதோறும், நிதியாண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பொதுத்துறை, தனியார் வங்கிகள், விவசாயம், சுய தொழில், கல்வி உள்பட பல்வேறுவகை கடன்களை வழங்கி, நிர்ணயிக்கப்படும் இலக்கை எட்டச்செய்கின்றன.
அந்தவகையில், நடப்பு 2025 - 26ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்க பிரசாத், மேலாளர் சுரேஷ்குமார் உடனிருந்தனர்.
நடப்பு நிதியாண்டில், முன்னுரிமை கடன்களுக்கான இலக்கு, 45,433 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு, 18,508.01 கோடி ரூபாய்; சிறு, குறு தொழில் துறைக்கு, 25,600.42 கோடி ரூபாய்; வீட்டுக்கடன், மரபுசாரா எரிசக்தி கடன், சமூக உள்கட்டமைப்பு, கல்வி கடன் 1,024.29 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
'வங்கிகள், கல்விக் கடன்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து, மாணவர்களுக்கு உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு கடன் வழங்கவேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.