/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கைவிலங்குடன் கைதி ஓட்டம்; மக்களிடம் சிக்கினார்; போலீசாரிடம் 'எஸ்கேப்'
/
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கைவிலங்குடன் கைதி ஓட்டம்; மக்களிடம் சிக்கினார்; போலீசாரிடம் 'எஸ்கேப்'
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கைவிலங்குடன் கைதி ஓட்டம்; மக்களிடம் சிக்கினார்; போலீசாரிடம் 'எஸ்கேப்'
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கைவிலங்குடன் கைதி ஓட்டம்; மக்களிடம் சிக்கினார்; போலீசாரிடம் 'எஸ்கேப்'
ADDED : ஜன 14, 2025 06:59 AM

உடுமலை; திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர், கைவிலங்குடன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர், எலக்ட்ரீசியன் மோகன்குமார்,40. நேற்று முன்தினம் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக் திருட்டு போனது.
அவர், பைக்கை தேடி சென்ற போது, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே, பைக்கை தள்ளி சென்ற, இருவரை பொதுமக்கள் உதவியுடன் விரட்டி உள்ளார். இதில், ஒருவர் தப்பி ஓட, மடத்துக்குளத்தை சேர்ந்த முருகானந்தம், 23, என்பவர் பொதுமக்களிடம் சிக்கினார். அவரை, மடத்துக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மருத்துவ பரிசோதனைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயாராகிக்கொண்டிருந்தனர்.
கைது செய்த முருகானந்தத்தை, கை விலங்குடன் போலீஸ் ஸ்டேஷனில் அமர வைத்திருந்த நிலையில், ஸ்டேஷன் பின்பக்க வழியாக, இரவு, 9:00 மணியளவில்,திடீரென தப்பி ஓடினார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், விரட்டி சென்றனர். ஆனால், ஸ்டேஷன் பின் பக்கம், கம்பி வேலியை தாண்டி, ரயில்வே வழித்தடம் வழியாக ஓடி, அமராவதி ஆற்றுப்பகுதிக்குள் சென்று தலைமறைவாகி விட்டார்.
இரவில், பல மணி நேரம் தேடியும், அவர் சிக்கவில்லை. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரித்து, தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
அவர் மீது, மடத்துக்குளம், உடுமலை, தளி, பல்லடம் என மாவட்டத்தின் பல்வேறு ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பிடித்து கொடுத்த, பைக் திருடன், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கிரீஷ் அசோக் யாதவிடம் கேட்டபோது, ''ஸ்டேஷனில் இருந்து தப்பி சென்ற கைதியை, தனிப்படை அமைத்து தேடுகிறோம். விரைவில் பிடித்து விடுவோம்,'' என்றார்.