/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்கம் வென்றோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு
/
தங்கம் வென்றோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு
ADDED : பிப் 25, 2024 11:32 PM
திருப்பூர்':'கேலோ இந்தியா' போட்டியில் தங்கம் வென்ற, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, இரு வருக்கு தலா, இரண்டு லட்சம் ரூபாய் வீதம் நான்கு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுத்தொகையை, தமிழக அரசு வழங்கியுள்ளது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், தமிழ்நாடு இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை சார்பில், ஜன., 19 முதல், 31 வரை, சென்னையில், 'கேலோ இந்தியா' போட்டி நடந்தது. இதில், நாடு முழுதும் இருந்து, 4,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற வீராங்கனை பவீனா மும்முறை தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். வீரர், விஷ்ணு ஸ்ரீ, 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் அசத்தி, முதலிடம் பெற்று, தங்கம் வென்றார்.
'கேலோ' இந்தியா போட்டியில் தமிழகம், 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் உள்ளிட்ட, 98 பதக்கங்களை கைப்பற்றி, இரண்டாமிடம் பெற்றது. முதலிடத்தை மகாராஷ்டிரா (158 பதக்கம்) கைப்பற்றியது.
இந்நிலையில், 'கேலோ இந்தியா' போட்டியில் சாதித்தவருக்கான பாராட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, திருப்பூரை சேர்ந்த வீரர், விஷ்ணு ஸ்ரீ, வீராங்கனை, பவீனா இருவருக்கும் தலா, இரண்டு லட்சம் ரூபாய் வீதம், நான்கு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி, பாராட்டியுள்ளார். இது திருப்பூர் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

