/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீருக்கு சிக்கல்; மக்கள் முற்றுகை
/
குடிநீருக்கு சிக்கல்; மக்கள் முற்றுகை
ADDED : அக் 19, 2024 11:42 PM

திருப்பூர்: திருப்பூர், பூச்சக்காடு பகுதியில் மாநகராட்சியின் மேல்நிலைத் தொட்டி வளாகம் உள்ளது.
இத்தொட்டிக்கு 3வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதம் முன், அப்பகுதியில் நான்காவது குடிநீர் திட்டத்துக்கான குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியின் போது, இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் 3வது திட்டக்குழாய்கள் சேதமாகின.
இதனால், அழுத்தம் குறைந்து மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் வரத்து குறைந்தது. இதனால், சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்னை சற்று அதிகரித்து கடந்த ஒரு மாதமாக பூச்சக்காடு பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் குடிநீர் சப்ளை முற்றிலும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மேல்நிலைத் தொட்டி வளாகத்தை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி, குழாய் சேதத்தை சரி செய்து, குடிநீர் வினியோகிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டொரு நாளில் குடிநீர் சப்ளை சரி செய்யா விட்டால் பிரதான ரோட்டில் மறியல் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
n சேதமான குழாய் 3 வது குடிநீர் திட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. ஆனால், 4வது குடிநீர் திட்டத்தின் பணிகள் நடந்த போது குழாய் சேதமடைந்துள்ளது. இதனால், இரு தரப்பினரும் இதை சரி செய்யாமல் போக்கு காட்டுகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.