/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரச்னைகள் 'வலம்'... எங்கும் அவலம்
/
பிரச்னைகள் 'வலம்'... எங்கும் அவலம்
ADDED : ஏப் 18, 2025 11:41 PM

திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டில், வி.ஜி.வி., கார்டன், வி.ஜி.வி., விஜய் கார்டன், ஜெய் நகர், பச்சையப்பா நகர், காமாட்சி நகர், எம்.சி., நகர், போயர் காலனி, அமர்ஜோதி பொன்நகர், காசிபாளையம், மணியகாரம்பாளையம் செந்தில் நகர், மகாலட்சுமி நகர், காஞ்சி நகர், அண்ணா நகர், திருவேங்கடம் நகர், ஸ்ரீ ஜெய் நகர், வி.எஸ்.ஏ., நகர், மே பிளவர் கார்டன், அமிர்தா கார்டன் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.
கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்
இவை, நல்லுார் நகராட்சி பகுதியில் இருந்து, மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்ட பகுதி என்பதால், சாக்கடை கால்வாய் வசதி முழுமை பெறவில்லை. சந்திப்பு சாலைகள், பெரிய ரோடுகளில் கால்வாய் உள்ளது. குறுக்கு, சந்து வீதியில் கால்வாய் இல்லாததால், அமர்ஜோதி பொன்நகர், வி.ஜி.வி., கார்டன் உள்வீதிகளில் கழிவுநீர் வழிந்தோட 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லை; மழை நாட்களில், கழிவுநீரும், மழை நீரும் தேக்கமாகிறது.
புதர்மண்டிய நகர் நல மையம்
செந்தில் நகர் மாநகராட்சி நகர் நல மையம் முன் புதர்மண்டி சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. மக்கள் தொகை அதிகம், வீதிகள் எண்ணிக்கை கூடுதல் என்ற காரணத்தை காட்டி, இரண்டு மாதம் ஒருமுறை தான் கொசுமருந்து தெளிக்க ஊழியர்கள் வருகின்றனர். அதுவும் முழுமையாக, மருந்து தெளிப்பதில்லை; பாதி வீதியுடன் திரும்பி விடுவதாக, வார்டு மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தார் சாலை என்னாச்சு?
பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி, 46வது வார்டில், மக்கள் தொகை, வாகன போக்குவரத்து ஏற்ற, முழுமையாக சாலை வசதிகள் இல்லை.
ராக்கியாபாளையம், மணிய காரம்பாளையம், காசிபாளையம் தவிர பிற இணைப்பு சாலைகள் சறுக்கும் சாலையாக மண் தேங்கி, குண்டும் குழியுமாக உள்ளது. வார்டில் குப்பைத்தொட்டிகள் குறைந்தளவே வைத்துள்ளனர்.
குப்பை சரிவர அள்ளாமல் தேக்கமாகியுள்ளது. கண்காணிப்பு இல்லாததால், நொய்யலில் பிளாஸ்டிக் மட்டுமின்றி, இறைச்சி கழிவுகளும் அப்படியே கொட்டி செல்கின்றனர்.
காஞ்சி நகர் - வி.ஜி.வி., கார்டன் எக்ஸ்டன்சன் பகுதியில், பாதாள சாக்கடை, குழாய் பதிக்க குழி தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது. வார்டின் பல பகுதியில் பதிக்க வேண்டிய குழாய்கள் ஆங்காங்கே இறக்கி வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் வழங்கப்படுகிறது. காசிபாளையம் - மணியகாரம்பாளையம் இடையே நொய்யல் ஆற்றை ஒட்டி தார் ரோடு போடுவதாக கூறினர். இரண்டரை ஆண்டாக அந்தப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, குப்பை கொட்டும் இடமாக உள்ளது.
மாநகராட்சி பள்ளிக்குமைதானம் இல்லை
காஞ்சி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி போதிய இடவசதி இல்லாததால், அருகருகே இருவேறு இடங்களில் செயல் படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 441 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால், பள்ளிக்கு மைதானம் இல்லை. கிராமப்புறத்தில் இருந்தும், திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாக, பள்ளிக்கு மைதான வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது பெற்றோரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது. வார்டில் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மட்டுமே உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பதற்கேற்ப, அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.