/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயம் சாகுபடியில் சிக்கல்; மானியத்துக்கு எதிர்பார்ப்பு
/
சின்னவெங்காயம் சாகுபடியில் சிக்கல்; மானியத்துக்கு எதிர்பார்ப்பு
சின்னவெங்காயம் சாகுபடியில் சிக்கல்; மானியத்துக்கு எதிர்பார்ப்பு
சின்னவெங்காயம் சாகுபடியில் சிக்கல்; மானியத்துக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 04, 2025 10:15 PM

உடுமலை; விதை வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக, நடவு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்; சாகுபடி பரப்பு குறைவதை தடுக்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக நாற்றுகள் வினியோகிக்க, உடுமலை வட்டார விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், ஆண்டுக்கு இரு சீசன்களில், பிரதான சாகுபடியாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
சுமார், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. சீசன் சமயங்களில் விளைநிலங்களில், பட்டறை அமைத்து பல ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு செய்து வந்தனர். இவ்வாறு, பிரதானமாக இருந்த இதன் சாகுபடி பரப்பு பல்வேறு காரணங்களால், படிப்படியாக குறையத்துவங்கியது.
குறிப்பாக, சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்து, ஏக்கருக்கு, 70 ஆயிரம் ரூபாய் என்றளவுக்கு சென்றது. ஆனால், அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
இதனால், ஏற்பட்ட நஷ்டத்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், சின்னவெங்காய சாகுபடியை கைவிட துவங்கினர். மேலும், பருவநிலை மாற்றம் காரணமாக, அறுவடையின் போது மழை பெய்து, அழுகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது. இவ்வாறு, கோடை சீசனிலும், சாகுபடி பரப்பு குறைந்தது.
கடந்த ஓராண்டாக, மீண்டும் சின்னவெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினாலும், நடவு வெங்காயம் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.
தற்போது நடவு வெங்காயம் கிலோ 45 ரூபாயாக உயர்ந்து விட்டது; நாற்றுகளும் கிடைப்பதில்லை.
விவசாயிகள் கூறியதாவது: உடுமலை பகுதியில் இருந்து சின்னவெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலை மாறி, உள்ளூர் சந்தைக்கே பிற மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாகுபடி செலவு அதிகரித்து கொண்டே இருப்பதே முக்கிய பிரச்னையாக உள்ளது. தோட்டக்கலைத்துறை வாயிலாக, நாற்று மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
சாகுபடி பரப்பும் குறையாது; மக்களுக்கும் அனைத்து சீசன்களிலும் குறைந்த விலையில், சின்னவெங்காயம் கிடைக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.