/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமற்ற பட்டு முட்டையால் உற்பத்தி பாதிப்பு; பட்டுக்கூடு விவசாயிகள் வேதனை
/
தரமற்ற பட்டு முட்டையால் உற்பத்தி பாதிப்பு; பட்டுக்கூடு விவசாயிகள் வேதனை
தரமற்ற பட்டு முட்டையால் உற்பத்தி பாதிப்பு; பட்டுக்கூடு விவசாயிகள் வேதனை
தரமற்ற பட்டு முட்டையால் உற்பத்தி பாதிப்பு; பட்டுக்கூடு விவசாயிகள் வேதனை
ADDED : ஆக 16, 2025 11:18 PM

உடுமலை; தமிழக பட்டுவளர்ச்சித்துறை தரமற்ற பட்டு முட்டைகள் வினியோகிப்பதால், பட்டுக்கூடு உற்பத்தி, 40 சதவீதம் வரை பாதித்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 26 ஆயிரம் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைத்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான பட்டுப்புழு முட்டைகளை, தமிழக பட்டு வளர்ச்சித்துறை வினியோகம் செய்கிறது.
இதனை வாங்கி, இளம் புழு வளர்ப்பு மனைகளில், ஏழு நாட்கள் வளர்த்தி, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், 17 நாட்கள் வளர்த்தப்பட்டு, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், பட்டுவளர்ச்சித்துறை சார்பில், கிருஷ்ணகிரி, ஒசூர், கேரளா மாநிலம் பாலக்காடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில், விதைக்கூடு கொள்முதல் செய்யப்படுகிறது.
அதன்பின், கோவை, கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதியிலுள்ள முட்டை வித்தகங்களில், பட்டுப்பூச்சிகளாக பராமரித்து, முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை, நான்கு மாதம் முதல், ஆறு மாதம் வரை குளிர் சாதன அறையில், தொடர் கண்காணிப்பில் பராமரித்து, முட்டையாக வினியோகம் செய்ய வேண்டும்.
ஆனால், குறைந்த நாட்கள் மட்டுமே பராமரித்து, தரமற்ற முட்டை வழங்கப்படுவதாகவும், அதனால், 40 சதவீதம் வரை பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து, கடுமையாக பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
அரசு பட்டுப்புழு முட்டை வித்தகங்களில், குறைந்த பட்சம், 4 முதல், 6 மாதங்கள் வரை முட்டை பராமரித்து, அதன்பின் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால், குறைந்த காலத்தில், மூன்று மாதங்களுக்குள், அமிலத்தன்மை உள்ள முட்டைகளாக வினியோகம் செய்யப்படுவதால், வளர்க்கும் போது பட்டுப்புழுக்கள் இறப்பு, கூடு கட்டாத தன்மை என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
100 முட்டைகள் வரை உள்ள ஒரு முட்டை தொகுதிக்கு, நுாறு கிலோ கூடு கிடைக்க வேண்டும். தரமற்ற முட்டை காரணமாக, 50 முதல், 60 கிலோ மட்டுமே கூடு கிடைக்கிறது. பாதிப்பை தவிர்க்க, தரமான முட்டை வினியோக வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.