/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலிதீன் கழிவு மறுசுழற்சி 'பேவர் பிளாக்' தயாரிப்பு
/
பாலிதீன் கழிவு மறுசுழற்சி 'பேவர் பிளாக்' தயாரிப்பு
பாலிதீன் கழிவு மறுசுழற்சி 'பேவர் பிளாக்' தயாரிப்பு
பாலிதீன் கழிவு மறுசுழற்சி 'பேவர் பிளாக்' தயாரிப்பு
ADDED : ஜன 07, 2025 07:24 AM

திருப்பூர்; தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணியை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவது குறித்து, திருப்பூர் பாதுகாப்பு இயக்கத்தினர் மக்காத பாலிதீன் கழிவு பயன்படுத்தி ரோடு அமைப்பது, 'பேவர் பிளாக்' கற்கள் தயாரிப்பது போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
திருப்பூர் பாதுகாப்பு இயக்க நிறுவனர், டாக்டர் வீரபத்மன் கூறியதாவது:அப்பார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தொழிற் கூடங்களில் திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வருகிறோம். தினமும், 50 கிலோவுக்கு மேல் குப்பை வெளியேற்றும் நிறுவனத்தினர், குப்பையை தரம் பிரித்து, அவர்களாகவே சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி குப்பைக் கொட்டும் இடத்துக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அல்லது, தங்கள் இடங்களிலேயே குப்பை மேலாண்மை செய்ய வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலும் இதுதான். அருகருகேயுள்ள ஓட்டல் உரிமையாளர்கள் இணைந்து, பிரத்யேக இடம் ஏற்பாடு செய்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனையும் வழங்கி வருகிறோம். திருச்சி 'பெல்' நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பாலிதீனை மறுசுழற்சி செய்து, சாலை அமைக்க பயன்படுத்துகின்றனர். பாலிதீனில் இருந்து 'பைரோ ஆயில்' என்ற எரிபொருள் தயாரிக்கும் பணி செங்கல்பட்டில் நடக்கிறது; தற்போது, ராணிபேட்டை உள்ளிட்ட சில இடங்களிலும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் இப்பணி நடக்கிறது. அதற்கான தொழில்நுட்ப ஆலோசனையை வழங்கி வருகிறோம்.
உணவுக்கழிவில் இருந்து, 'பயோ கேஸ்' எடுத்து, மின்சாரம் தயாரிக்கும் பணி, காரைக்குடி மாநகராட்சி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது.
செங்கல்பட்டில், 'இ-வேஸ்ட்' எனப்படும் எலக்ட்ரானிக் கழிவை மறுசுழற்சி செய்து 'கேபிள்' தயாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் அமைப்பினர் பாலிதீன் கவர் உள்ளிட்ட வீசியெறியப்படும் பாலிதீன் வகைகளை மறு சுழற்சி செய்து பேவர் பிளாக், கதவு, கூரை, டேபிள், இருக்கை, பல்வேறு தடிமங்களில் மேற்கூரை மற்றும் 'பேவர் பிளாக்' ஆகியவற்றை தயாரிக்கின்றனர்; இதற்கான தொழில்நுட்ப ஆலோசனையும் வழங்கி வருகிறோம். மாநிலம் முழுக்க இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெற்றிகரமாக மாறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.