/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பளப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! : 24ம் தேதி மீண்டும் நடக்கிறது
/
சம்பளப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! : 24ம் தேதி மீண்டும் நடக்கிறது
சம்பளப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! : 24ம் தேதி மீண்டும் நடக்கிறது
சம்பளப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! : 24ம் தேதி மீண்டும் நடக்கிறது
ADDED : பிப் 17, 2026 05:16 AM

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டுக் குழுவில் கலந்து பேசி,வரும் 24ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என, நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது
திருப்பூரில், உற்பத்தியாளர் சங்கங்களும், தொழிற்சங்கங்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன், பழைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்(டீ), தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்(சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம், (டீமா), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் ( சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்( டெக்மா) ஆகிய ஆறு உற்பத்தியாளர் சங்கங்களும்; சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - ஏ.டி.பி., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., - எம்.எல்.எப்., - டி.டி.எம்.எஸ்., ஆகிய ஒன்பது தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழுவினர், தனித்தனியே ஆலோசித்தும், கோரிக்கை குறித்து பரிசீலித்தனர்.
எவ்வளவு சதவீத சம்பளம் கூடுதலாக வழங்குவீர்கள்?'
ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில், நேற்று மாலை, நடந்தது. ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கூட்டுக்குழு நிர்வாகிகள், சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களின் பயணப்படி, ஓவர் டைம் பேட்டா உள்ளிட்ட கோரிக்கையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி கோரிக்கையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. கடந்த ஒப்பந்தத்தில், 32 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதை காட்டிலும் கூடுதலாக எவ்வளவு சதவீதம் வழங்குவீர்கள் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
தொழிலாளருக்கான சம்பள உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கும் வகையில், கூட்டுக்குழு ஆலோசனைக்கு பிறகு, வரும் 24ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவது என நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
---
பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு ஆறாவது கட்டப் பேச்சுவார்த்தை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இதில், பின்னலாடை தொழில் அமைப்பினர் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

