/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி விதிப்பு குறைகேட்பு முகாம்
/
சொத்து வரி விதிப்பு குறைகேட்பு முகாம்
ADDED : டிச 06, 2024 05:00 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 60 வார்டுகளில் ஏறத்தாழ, 3 லட்சம் வீடுகள், வணிக கட்டடங்கள் உள்ளன. இவற்றுக்கு பகுதி வாரியாக சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புகள், தொழிற் சாலைகள், வர்த்தக கட்டடங்கள் எனவும், ஏ,பி மற்றும் சி என மூன்று பிரிவுகளாகவும் சதுரடி அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி ஆண்டுதோறும் ஏப்., முதல் செப்., மற்றும் அக்., முதல் மார்ச் வரையிலான இரு அரையாண்டுக்கு விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. வரி விதிப்புகளில் ஏற்றத் தாழ்வு உள்ள நிலையில், அது குறித்த முழுமையான விவரங்களுடன் கட்டட உரிமையாளர் மாநகராட்சிக்கு விண்ணப்பித்து தீர்வு காணும் வகையில், மாதத்தின் இரண்டு மற்றும் நான்காவது வியாழக்கிழமை இந்த முகாம் நடத்தப்பட்டது.
வருவாய் பிரிவினர் இதற்கான மனுக்களைப் பெற்று, விவரங்களை சரி பார்த்து, உரிய மண்டல உதவி கமிஷனர்களுக்கு அனுப்பி வைப்பர். உரிய மண்டல மற்றும் பகுதிக்கான வருவாய் பிரிவு அலுவலர்கள், விண்ணப்பதாரர் கட்டடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, குறைபாடு இருப்பின் அதனை சரி செய்து பரிந்துரை செய்து, சொத்து வரி விதிப்பில் உரிய மாற்றம் செய்து உத்தரவிடப்படும்.
கட்டட உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர். முன்னதாக, முகாமை, மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். கமிஷனர் ராமமூர்த்தி, துணை கமிஷனர் சுல்தானா, முதன்மை பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் மொத்தம் 59 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதல் மண்டலம் - 21 மனு; 2 வது மண்டலம்- 11; 3 வது மண்டலம் 21 மற்றும் நான்காவது மண்டலத்தில் 6 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.