/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீண்ட இடைவெளிக்கு பின் சாமை சாகுபடியால்...மலையில் செழுமை! பாரம்பரியத்துக்கு மாறிய மலைவாழ் மக்கள்
/
நீண்ட இடைவெளிக்கு பின் சாமை சாகுபடியால்...மலையில் செழுமை! பாரம்பரியத்துக்கு மாறிய மலைவாழ் மக்கள்
நீண்ட இடைவெளிக்கு பின் சாமை சாகுபடியால்...மலையில் செழுமை! பாரம்பரியத்துக்கு மாறிய மலைவாழ் மக்கள்
நீண்ட இடைவெளிக்கு பின் சாமை சாகுபடியால்...மலையில் செழுமை! பாரம்பரியத்துக்கு மாறிய மலைவாழ் மக்கள்
ADDED : மார் 04, 2026 06:30 AM

உடுமலை: மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், பாரம்பரிய தானிய சாகுபடியான சாமை சாகுபடி செய்து, விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி, ஈசல் திட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சி வயல் என, 15க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், சிறிய விவசாயம் செய்து வருவதோடு, வனப்பொருட்கள் சேகரிப்பு, கால்நடைகள் வளர்ப்பு என வாழ்வாதாரமாக உள்ளது.
மலைப்பகுதியில், சாமை, தினை, குதிரை வாலி என பாரம்பரிய உணவு பொருட்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக, மலை பீன்ஸ், மொச்சை உள்ளிட்ட சாகுபடி மட்டுமே மேற்கொண்டு வந்தனர்.
தானிய பயிர் உற்பத்தியை பெருக்கும் வகையில், உடுமலை வேளாண் துறை சார்பில், மலைவாழ் மக்களுக்கு, நிலக்கடலை மற்றும் சாமை விதை மற்றும் இடு பொருட்கள் வழங்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், இடு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.
பெரும்பாலும் மலைப்பகுதிகளில், 80 முதல், 90 நாட்களில், சாமை அறுவடைக்கு தயாரான நிலையில், செயற்கை உரங்கள் ஏதும் பயன்படுத்தாமல், முழுவதும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நிலையில், ஏக்கருக்கு, ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளது.
சாமை அறுவடை செய்த மலைவாழ் மக்களுக்கு, அங்கு அடித்து, சாமை தானியமாக பிரிக்கும் உலர் களம் வசதி இல்லை.
அதனால், மாவடப்பு, குருமலை பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள், அறுவடை செய்த சாமை பயிரை, கதிர்களுடன், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, காய வைத்து, இயந்திரங்கள் வாயிலாக, கதிர் அடித்து தானியமாக பிரித்து வருகின்றனர்.
நீண்ட காலத்திற்கு பின் சாமை சாகுபடி செய்த விவசாயிகள், வனப்பகுதிலேயே, கதிர் அடிக்கும் வசதிகள் செய்து கொடுத்தால், இயற்கை முறையில், தானிய பயிர் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என தெரிவித்தனர்.
நீண்ட கால இடைவெளிக்கு பின், மலைப்பகுதியில் பாரம்பரிய உணவு பொருளான சாமை சாகுபடி செய்து, இயற்கை முறையில் ரசாயண உரங்கள் இல்லாமல் விளைவித்து, விற்பனைக்கு வந்துள்ளதும், இதற்கு நிலப்பகுதிகளில் விளையும் சாமை பயிரை விட, அதிக சுவை மற்றும் சத்து உள்ளதால், விற்பனையும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான மலைவாழ் மக்கள் விற்பனை செய்யாமல், சாமை பிரித்து எடுத்ததும், தங்கள் உணவு தேவைக்காக மீண்டும் மலைப்பகுதிக்கு எடுத்துச்சென்றனர்.
உலர்களம் அமைக்கணும் மலைவாழ் மக்கள் கூறியதாவது : மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், சாமை உள்ளிட்ட தானிய பயிர் சாகுபடிக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ண நிலை, தண்ணீர் வசதி இருந்தாலும், அவற்றை விளைவித்தால், அறுவடை செய்து, தானியங்களை பிரித்து எடுக்க, உலர் களம், இயந்திரங்கள் வசதி இல்லை.
ஒரு சிலர் வயல்களிலேயே அறுவடை செய்து, தானியங்களை பிரித்து எடுத்த போது சேதம் அதிகரித்தது. அதனால், அறுவடை செய்ததும், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, காய வைத்து, தானியங்களை பிரித்து எடுத்து செல்கிறோம்.
சாமை, தினை உள்ளிட்ட பாரம்பரிய உணவு உற்பத்திக்கு, விதை உள்ளிட்ட இடு பொருட்கள் மட்டுமின்றி, அறுவடைக்கு பின் தானியமாக பிரித்து, விற்பனைக்கு தயார் செய்வது உள்ளிட்ட வசதிகளை வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் வழங்கினால், நமது மண்ணின் பாரம்பரிய ரக தானியங்கள் சாகுபடியை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

